புதரைச் சீரமைப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிய பொழுது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் திருப்போரூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்போரூர் அடுத்த மேட்டுத்தண்டலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான அட்டை நிறுவனம் ஒன்று செயல்பட்டு வந்தது. சில நாட்களுக்கு முன்பு இந்த அட்டை நிறுவனம் மூடப்பட்டது. அட்டை நிறுவனம் இருந்த பகுதியில் முட்புதர்கள் அதிகமாக இருந்ததால் அப்பகுதி மக்கள் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தித் தருமாறு கோரிக்கை வைத்தனர். புகாரின் அடிப்படையில் அந்தத் தனியார் நிறுவனத்தினர் இருளர் இன மக்களை வைத்து அந்தப் பகுதியைச் சுத்தம் செய்ய ஏற்பாடு செய்தனர்.
அப்பொழுது கிளைகள் மற்றும் புதர்களை வெட்டச் சென்ற தொழிலாளிகளில் சீனு என்பவர் மரக்கிளையை வெட்ட முயன்ற பொழுது பாலித்தீன் கவரில் மர்மப் பொருள் ஒன்று புதரில் கிடந்துள்ளது. வெட்டுவதற்காகக் கத்தியை ஓங்கிய பொழுது அந்தக் கவரின் மீது கத்தி பட்டது. அப்போது அதிலிருந்து மர்மப்பொருள் வெடித்துச் சிதறியதில் சீனு தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயமடைந்த அவரைச் சக தொழிலாளர்கள் மீட்டு அவரைத் திருப்போரூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். தொடர்ந்து அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து திருப்போரூர் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சோதனை செய்ததில் அந்த வெள்ளை நிற கவரில் இருந்தது நாட்டு வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியில் இது போன்று வேறு சில இடங்களில் நாட்டு வெடிகுண்டுகள் இருக்கிறதா என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். போலீசார் நடத்திய அந்தச் சோதனையில் மேலும் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டது. வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டு எப்படி இங்கு வந்தது என்பது குறித்துப் போலீசார் தங்களது விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.