கரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களை, பொதுமக்களைத் தேடிச்சென்று விற்பனை செய்ய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் வழிக்காட்டலின்படி வேளாண்மைத்துறை அனுமதி வழங்கிவருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளுர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர், இருசக்கர வாகனத்தில் பூ கொண்டு சென்று மொத்த வியாபாரியிடம் வழங்க தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநரிடம் அனுமதி பெற்றுள்ளார். கலசப்பாக்கம் டூ போளுர் டவுன் சென்று வர தினமும் தனது வாகனத்தில் பூ கொண்டு சென்று தந்துவிட்டு வர அனுமதி தரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 24- ஆம் தேதி பூ கொண்டு சென்றபோது, போளுர் நகரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நின்றுயிருந்த காவலர், இவரது வாகனத்தைப் பிடித்து, மாவட்ட காவல்துறையால் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்காப் என்கிற மொபைல் செயலியில், வண்டி எண், கைபேசி எண்ணை வாங்கிப் பதிவு செய்துள்ளார். அனுமதி வாங்கிக்கிட்டு தான் சார் போகிறேன் என இவர் தகவல் சொல்லியுள்ளார்.
நீ அனுமதி வாங்கனா உன்னை விட்டுவிட வேண்டுமா எனக்கேட்டு, வாகனத்தோடு நிறுத்தி அவரை புகைப்படம் எடுத்து, நீ 2,871 முறை இந்த வண்டியில் சுத்தியிருக்கற எனச்சொல்லி அவரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சார், நான் ஒரு விவசாயி, வியாபாரியாவும் இருக்கேன். அதனால் தான் அனுமதி வாங்கி, பூக்களை வாங்கி அனுப்பறன். இவ்வளவு முறை போய் வர வாய்ப்பில்லை எனச் சொல்லியும் அவர் வண்டியை புக் செய்துவிட்டு அனுப்பியுள்ளனர்.
அதேபோல் கீழ்பென்னாத்தூரைச் சேர்ந்த ஒரு விவசாயி, ஈச்சர் வாகனத்தில் காய்கறிகள் விற்பனை செய்ய தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி வாங்கியுள்ளார். அந்த வாகனத்தின் மீது கீழ்பென்னாத்தூர் காவல்நிலைய எல்லையில் நிறுத்தி வாகனத்தை, ஸ்மார்ட் காப்பில் புக் செய்துள்ளனர்.
இந்த இரண்டு விவகாரத்தையும் சம்மந்தப்பட்ட நபர்கள் முகநூலில் பதிவு செய்துள்ளனர். இது காவல்துறை மீது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளிடம் அனுமதி பெற்று சென்று விற்பனை செய்யும் வியாபாரிகள், விவசாயிகள் வாகனங்களைப் பதிவு செய்வது எந்த விதத்தில் சரியானது என்கிற கேள்வி எழும்பியுள்ளது. இது பற்றி சமூக ஆர்வலர்கள் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளனர்.
இதுப்பற்றி நாம் காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, அநாவசியமாக வெளியே சுற்றுபவர்களை முடக்கவே இந்த ஆப் உருவாக்கப்பட்டது. இதனால் வெளியே சுற்றுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இந்த ஆப் மூலம் வாகனம், அதன் ஓட்டுநர் புக் செய்யப்படுவார்கள். 3 முறை எச்சரிக்கப்படுவார்கள், அதன்பின்னரும் தொடர்ந்தால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யச் சொல்லியே எஸ்.பி சிபி.சக்கரவர்த்தி உத்தரவிட்டுள்ளார். அனுமதி பெற்றுக்கொண்டு வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இதில் அடங்கமாட்டார்கள். என்ன நடந்தது என விசாரித்துவருகிறார்கள் என்கிறார்கள்.
ஸ்மார்ட் ஆப் பற்றி பொதுமக்களுக்கு தெளிவாக விளக்கம் சொல்லாமல், பெட்ரோல் பங்க், செக் போஸ்ட்களில் நின்றுக்கொண்டு வாகனங்களை மடக்கிப் பதிவு செய்கின்றனர். அநாவசியமாக வருபவர்களைப் பதிவு செய்தால் பரவாயில்லை. அனுமதி பெற்று வருபவர்களையும் பதிவு செய்வது தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.