Skip to main content

"அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது"- ஓ.பன்னீர்செல்வம் மனு! 

Published on 21/06/2022 | Edited on 21/06/2022

 

"Permission should not be given to the AIADMK General Committee" - O. Panneerselvam petition!

 

அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு அனுமதி தரக்கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. 

 

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, "வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தைக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து ஜூன் 19- ஆம் தேதி அன்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். 

 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கட்சி சட்டத்திட்ட விதிகளுக்கு மாறாக, கட்சியின் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பா.பென்ஜமின், மேற்காணும் செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பாதுகாப்புக் கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கட்சி சட்டதிட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. 

 

மேலும், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தினை தள்ளி வைக்கலாம் என்று கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம், திருமண மண்டப மேலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தற்போது, நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளபடியாலும் பா.பென்ஜமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களைக் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்