Skip to main content

தேர்தல் எதிரொலி; ஈரோட்டில் 1 லட்சம் வடமாநில தொழிலாளர்கள் காலி

Published on 10/05/2024 | Edited on 10/05/2024
Election Echoes; 1 lakh North State workers are vacant in Erode

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3  கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களிலும், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் என மாவட்டம் முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலையொட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

nn

ஈரோடு மாவட்டத்தில் பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஜவுளி, உணவகங்கள் என பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அவர்களின் பங்கு மிகப் பெரியது. தற்போது அவர்கள் ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறும்போது, ''ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகள், செங்கல் சூளை, ஜவுளி நிறுவனங்கள் முக்கியமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார்.

சார்ந்த செய்திகள்