மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கிராம புற ஊராட்சிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு நூறு நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் கிராமங்களில் உள்ள ஏழை தொழிலாளர்கள் வேலைக்கு செல்கிறார்கள்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் தாளவாடி ஒன்றியங்களில் உள்ள சுமார் 40 கிராம ஊராட்சிகளில் பணி புரிகிற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு சென்ற மூன்று மாதகாலமாக சம்பளமே கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் அந்த வார சம்பளம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்படுவது வழக்கம்.
சென்ற மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் ஏழைத் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது சம்பந்தமாக அந்த துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் மத்திய அரசின் திட்டம் என்பதால் தங்களுக்கு நிதி வராததால் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள 15 ஊராட்சிகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திங்கள்கிழமை பஸ்நிலையம் அருகே ஊர்வலமாக சென்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், சிபிஐ சத்தி ஒன்றிய செயலாளர் நடராஜ், ஸ்டாலின் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் காரணமாக சத்தியமங்கலத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற சத்தியமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் பவானிசாகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சி.பி.ஐ. ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர்கள் 870 பேரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர். மேலும், தாளவாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் மோகன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேரையும், ஆசனூர் அருகே அரேப்பாளையம் பகுதியில் அருள்சாமி, ஜீவபாரதி ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேரையும் போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, கடம்பூர் மலை பகுதிகளில் நடந்த இந்த மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும் தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாய் கொடுத்து பிறகு கடனை தள்ளுபடி செய்யும் மத்திய பா.ஜ.க.மோடி அரசு, உழைத்த கூலியை கேட்கும் இந்த தொழிலாளர்களிடம் கடன்காரனனாக உள்ளது.