Skip to main content

தென்தமிழக மக்களின் துயர் துடைக்க நீண்ட வடதமிழக மக்களின் கரங்கள்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
 people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

தென் தமிழ்நாட்டில் பெய்த 200 செ.மீ அளவிலான பெருமழை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியை தத்தளிக்க வைத்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாகக் குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும்  பாதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைத்து, சமுதாய சமையல் அறைகள் அமைத்து உணவு தரப்பட்டன. ஆயிரக்கணக்கான வீடுகள், பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல்லாயிரக் கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறி ஆகியுள்ளது, சிறு தொழில் நிறுவனங்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் தென் தமிழ்நாட்டில் பெய்த மழையை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அடுத்த நாள் இதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதனை எல்லாம் தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, தேசிய பேரிடர் நிதியிலிருந்து தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் தர முடியாது என கூறினார். இது தமிழக மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மழை சேதங்களை ஆய்வு செய்ய நிர்மலா சீதாராமன் தென் தமிழகத்திற்கு வருகிறார்.

people of North Tamil Nadu helped the rain-affected people of the southern district

மழையால் பாதிக்கப்பட்ட அந்த நான்கு மாவட்டங்களை மக்களின் துயர் துடைக்க வட மாவட்டங்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளனர். தென் தமிழ் நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் எ.வ.வேலு உதயநிதி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் போன்றவர்கள் களம் இறங்கி உள்ளனர். தூத்துக்குடி எம்.பி கனிமொழி அங்கேயே இருந்து நிவாரண பணிகளை செய்து வருகிறார்.

திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சில கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 50 லட்ச ரூபாய் மதிப்பிலும், திருப்பத்தூர் மா.செ தேவராஜ் எம்.எல்.ஏ சார்பில் 15 லட்சத்துக்கும், கள்ளக்குறிச்சி மா.செ வசந்தம் கார்த்திகேயன் 12 லட்ச ரூபாய் மதிப்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் இருந்தும் சில லட்ச ரூபாய்க்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியர் வழியாக அனுப்பி வைத்தனர். இப்படி விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்தும் ஆளும் கட்சியினர், தன்னார்வ அமைப்புகள், பொதுமக்கள் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர். தென் தமிழ்நாட்டு மக்களின் துயரத்தை துடைக்க வடக்கு மாவட்ட மக்களின் கரங்கள் நீண்டுள்ளன. 

சார்ந்த செய்திகள்