Skip to main content

குடிதண்ணீர் இல்லாமல் தவிப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்கள்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
People involved in road blockage without drinking water in Vellore Corporation

வேலூர் மாநகராட்சி 40து வார்டுக்கு உட்பட்ட கஸ்பா சித்தத்தா நகரில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாநகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுறது. இதனால் அப்பகுதி மக்கள் பணம் கொடுத்து குடங்களில் குடிநீர் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் தண்ணீர் தர நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் இன்று காலை 7 மணியளவில் வேலூரிலிருந்து- சதுப்பேரிக்கு செல்லும் சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தெற்கு காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது பொதுமக்கள், “காசு கொடுத்து குடிநீர் வாங்கி வருகிறோம். ஒரு மாதமாக இப்படி காசு கொடுத்து தண்ணீர் வாங்கி வருகிறோம். இன்னும் எத்தனை நாளைக்கு தான் தண்ணீர் வாங்குவது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வேலூர் மாநகர மேயராக இருப்பது ஒரு பெண் தானே? மேயர் சுஜாதாவும் ஒரு குடும்பப் பெண் தானே, குடும்பத் தலைவியான அவருக்கு பெண்கள் தண்ணீர் இல்லாமல் எப்படி சமைப்பார்கள், வீட்டில் இருப்பவர்கள் எப்படி தண்ணீர் குடிப்பார்கள் என அவருக்கு எப்படி தெரியாமல் போனது? எங்களுடைய கஷ்டம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களைப் பற்றி அவருக்கு கவலைப்பட நேரமில்லை போல. எங்களுக்கு உடனே குடிநீர் விநியோகம் செய்யவேண்டும்” என்றனர்.

இதையடுத்து குடிநீர் வழங்க மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசிநடவடிக்கை எடுப்பதாகக் காவல்துறை உறுதியளித்ததை அடுத்து மறியலைப் பொதுமக்கள் கைவிட்டனர். இந்தச் சம்பவம் காரணமாக அங்கு 2 மணிநேரத்துக்கு  பரபரப்பு ஏற்பட்டது, போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

வீட்டில் சந்தனக்கட்டை பதுக்கல்; முதியவர் கைது

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Sandalwood hoarding at home; The old man was arrested

                                                                      கோப்புப்படம் 

ஈரோட்டில் வீட்டில் 15 கிலோ சந்தனக்கட்டை பதுக்கிய முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் அரசபுரம் கே.என். பாளையம் பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பங்களாபுதூர் போலீசார் அங்கு ரோந்து சென்று பெருமாள் என்ற கட்டப்பெருமாள் என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் 15 கிலோ எடை கொண்ட சந்தனக் கட்டை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெருமாளை போலீசார் பிடித்து சந்தனக்கட்டையுடன் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பெருமாளிடம் வனத்துறையினர் சந்தன மரம் எங்கு வெட்டப்பட்டது. எந்தெந்த பகுதியில் சந்தன மரங்கள் வெட்டப்படுகிறது. எங்கெல்லாம் சந்தன மரம் விற்பனை நடக்கிறது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு ; போலீசார் விசாரணை

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
nn

ஈரோட்டில் நான்கு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு சோலார் அருகே வெங்கடேசன் என்பவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். வெளியூர்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறார். இந்த பேருந்துகள் அதே பகுதியில் இரவு நேரத்தில் நிறுத்தப்படுவது வழக்கம். இதேபோல் மற்ற பேருந்துகளும் அதே பகுதியில் நிறுத்தப்படுவது வழக்கம்.

நேற்று இரவு வழக்கம் போல் பேருந்துகள் நிறுத்தப்பட்டு இருந்தன. நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் பேருந்துகள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மூன்று பஸ்களின் முன்பக்க கண்ணாடிகள் உடைந்தன. அதேபோல் ஒரு சுற்றுலா வாகனத்தின் கண்ணாடியும் உடைந்தது. இது குறித்து வெங்கடேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக இதுகுறித்து மொடக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். நிறுவனத்தில் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.