அரசியலில் முகம் தெரியாத ஆட்களும்கூட, விசித்திரமாக ஏதாவது ஒன்றைச் செய்து, திடீரென்று பிரபலமாகிவிடுவர். அந்த மாதிரியான ஒரு ஆளாக இருக்கிறார், ராஜாசிங்.
வெம்பக்கோட்டை ஒன்றியம், ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கோவிந்தலட்சுமி, அந்தப் பகுதியில் அதிக வாக்குகளைப் பெற்ற (அ.தி.மு.க.) ஒன்றிய கவுன்சிலர் ஆவார். அவரது மகன் ராஜாசிங், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.
உள்ளூரில் அ.தி.மு.க. கிளைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், ராஜாசிங்குக்கும் ஒத்துப்போகவில்லை. அந்தக் கோபத்தில், வெம்பக்கோட்டை, தி.மு.க. கிழக்கு ஒன்றியச் செயலாளர் (பொறுப்பு) கிருஷ்ணகுமாரையும், வெம்பக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயபாண்டியனையும் சந்தித்து, தி.மு.க.-வில் சேர்ந்தார். அவர்களும், ராஜாசிங்கை வரவேற்று, தி.மு.க. கரைபோட்ட வேஷ்டியையும், சால்வையும் அவர் கழுத்தில் போட்டு, போட்டோ எடுத்துக்கொண்டனர். இத்தகவலை, திமுக மா.செ. கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் அவர்கள் தெரிவிக்க, இரண்டு நாள் கழித்து, முறைப்படி அறிவிப்போம் என்றிருக்கிறார், அவர்.
ராஜாசிங் கட்சி மாறிய தகவல், சென்னையிலிருந்த விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர் ராஜாசிங்கிடம் பேச, அன்று மாலையே, விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணிச் செயலாளரான, வழக்கறிஞர் நல்லதம்பியைச் சந்தித்தார் ராஜாசிங். நல்லதம்பியும் ஒரு சால்வையைப் போட்டு போட்டோ எடுத்துக்கொள்ள, “என் அரசியல் பயணம் அண்ணன் கே.டி.ஆர். வழியில்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவே இந்தச் சந்திப்பு..” என்று விளக்கம் வேறு தந்தார், ராஜாசிங்.
‘காலையில் ஒரு கட்சிக்கு தாவி, மாலையில் பழைய கட்சிக்கே திரும்பியது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது?’ என்று கேட்டோம், ராஜாசிங்கிடம்.
“அதுவந்து, என் பிறந்த நாளுக்கு கிடா வெட்டி விருந்து போட்டேன். தி.மு.க. ஒன்றியச் செயலாளர் எனக்கு நெருங்கிய நண்பர். அவரும் வந்து கலந்துகிட்டார்.” என்று கதைவிட, ‘உண்மை பேச மாட்டீர்களா?’ என்று இடைமறித்தோம். “ஆமாங்க.. எனக்கும் லோக்கல் எஸ்.ஐ.க்கும் ஆகல. எனக்கு வேண்டிய ஆளுங்க மேல அவரு கேஸ் போடறாரு. அதனால்தான், தி.மு.க.-வுக்கு போனேன். அப்புறம், அமைச்சர் கே.டி.ஆர். போன்ல கூப்பிட்டு என்னைத் திட்டினார். அ.தி.மு.க.-வுக்கு வந்துட்டேன். நான் எப்பவும் அ.தி.மு.க.-தான். அண்ணன் கே.டி.ஆர். காட்டிய வழியில் என்னோட அரசியல் தொடரும்.” என்றவர், “நான் சொன்னதை அப்படியே பேட்டியா போட்டுக்கங்க..” என்று ‘கெத்து’ காட்டினார்.
‘அரசியல் என்றாலே, பொய், புரட்டு, வஞ்சகம், சூது ஆகிய எல்லாமே அடக்கம்தான்’ என்ற பொதுவான விமர்சனத்துக்கு, ராஜாசிங் போன்ற வேடிக்கை அரசியல்வாதிகள், வலு சேர்த்து வருகிறார்கள்.