எனது மகளை அநியாயமாக தள்ளிவிட்டு கொன்று விட்டார்களே என மாணவி லோகேஸ்வரியின் பெற்றோர் கதறியது காண்போரையும் கண்ணீர் விட செய்தது.
கோவை நரசிபுரத்தில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாமாண்டு பிபிஏ பட்டப்படிப்பு படித்து வருகிறார் 19 வயதான லோகஸ்வரி என்ற மாணவி. இவரது தந்தை நல்லாகவுண்டர். நாதேகவுண்டன் புதூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் 20 மாணவர்களுக்கு நேற்று மாலை பயிற்சி அளித்தார்.
அப்போது இரண்டாவது மாடியில் இருந்து பேரிடர் காலங்களில் எப்படி தப்பித்துக்கொள்வது என்பது பற்றி செய்முறைப்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது, லோகேஸ்வரி என்ற மாணவி கீழே குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம் லோகேஸ்வரியை கீழே தள்ளிவிட்டுள்ளார்.
அதில், நிலைதடுமாறி முதல் மாடியில் இருந்த சன் சேடின் மேலே விழுந்த லோகேஸ்வரியின் பின் தலையிலும் வலது கழுத்துப்பகுதியிலும் அடிபட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக லோகேஸ்வரி அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் லோகேஸ்வரி வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து பிரேத பரிசோதனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து குறித்து வழக்கு பதிவு செய்து பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவி லோகேஸ்வரியின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத அவரது தந்தை நல்லா கவுண்டர் கூறியதாவது,
நேற்று காலை எனது மகள் வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பேரிடர் மேலாண்மை பயிற்சி இருப்பதாக எதுவும் சொல்லவில்லை. எனது மகள் தவறி கீழே விழுந்த சம்பவம் மதியம் 3 மணிக்கு நடைபெற்று உள்ளது. ஆனால் மாலை 5 மணி வரை கல்லூரி நிர்வாகம் சார்பில் எனக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
எனது மகள் இறந்த தகவல் சக மாணவி மூலம் தான் எங்களுக்கு தெரிய வந்தது. கல்லூரிக்கு அனுப்பிய எனது மகளை அநியாயமாக தள்ளிவிட்டு கொன்று விட்டனர் என அவர் கண்ணீர் மல்க கூறினார்.