Skip to main content

பழநி கோயில் நவபாஷாண சிலையை கடத்த சதி!

Published on 08/07/2019 | Edited on 08/07/2019

 

பழனி முருகன் கோயிலின் நவபாஷாண முருகன் மூலவர் சிலையை கடத்த தலைமை ஸ்தபதி முத்தையா சதித்திட்டம் தீட்டிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு பின்னணியில் இருந்த முக்கிய நபர்கள் யார் என விசாரணை நடக்கிறது. போகர் சித்தரால் பல ஆயிரம் ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்ட நவபாஷாண முருகன் சிலை பழநி கோயிலில் மூலவராக வழிபடப்படுகிறது.

 

p

 

2004ல் நவபாஷாண சிலை வலு இழந்துவிட்டதாக அதை மறைத்து 200 கிலோவில் ஐம்பொன் உற்சவர் சிலை வைக்கப்பட்டது. அதில் தங்கம், வெள்ளி சேர்க்கப்பட்டதில் மோசடி நடந்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் குழுவினர் சில மாதங்களுக்கு முன் கண்டு பிடித்தனர்.

 

இது தொடர்பாக ஸ்தபதி முத்தையா, கோயில் இணை ஆணையர் கே.கே. ராஜா, ஆணையர் தனபால். அறநிலையத்துறை இணை ஆணையர்கள் புகழேந்தி, தேவேந்திரன் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே நவபாஷாண சிலையை கடத்தி வெளிநாட்டில் விற்க சதி நடந்ததா என விசாரணை நடத்தினர். பழனி கோயிலில் நேற்று முன்தினம் முதல் பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி., முகேஷ்ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அமுதவள்ளி, தமிழ்ச்செல்வி குழுவினர் ஆய்வு செய்தனர். ஐம்பொன் உற்சவர் சிலை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்தபோது. நவபாஷாணத்திற்கு அருகே தங்கத்தை வைத்தால் சிறிது காலத்தில் கருமையாக மாறிவிடும் எனவும், இதனால்தான் மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிப்பது இல்லை எனவும் தெரிந்தது.

 

n

 

இதனால் நவபாஷாண சிலையை மறைத்து ஐம்பொன் உற்சவர் சிலையை வைத்ததும், காலப்போக்கில் அதை மூலவராக வைத்து விட்டு நவபாஷாண சிலையை கடத்த சதி செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து டி.எஸ்.பி. முகேஷ்ஜெயக்குமார் கூறுகையில், நவபாஷாண சிலையை கடத்த சதி திட்டம் தீடடப்பட்டதா என விசாரித்தோம். அது உண்மைதான் ஸ்பதி முத்தையாவே இந்த திட்டத்தை தீட்டி உள்ளார். அவரை இயக்கியவர்கள் யார் என விசாரிக்கிறோம். என்றார். 

 

பொன் மாணிக்கவேலிடம் கேட்டபோது சிலையை கடத்த சதி செய்த யாரும் தப்ப முடியாது. விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவர். இன்னும் இரு தினங்கள் கழித்து மீண்டும் பழனிக்கு வருவேன் என்றார்.


நவபாஷாணம் என்பது தீராத நோய்களை தீர்க்கும் சக்தி கொண்டது. பழனி முருகன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர், பாலை குடித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இதனால் முருகன் சிலையின் முதுகு பகுதியில் இருந்து நவபாஷாணத்தை சுரண்டி சிலர் விற்று விட்டதாக பல ஆண்டுகளுக்கு முன் சர்ச்சை கிளம்பியது. தற்போது சிலையையே மாற்றிவிட்டு கடத்த சதி நடந்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கடத்தல் பின்னணியில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சார்ந்த செய்திகள்