பழனி முருகனை தரிசிக்க வரும் முருக பக்தர்கள், பழநிக்கு பெயர்போன பஞ்சாமிர்தத்தை பிரசாதமாக வாங்கிச் செல்வது வழக்கம். அதற்காகவே பழனி தேவஸ்தானம் மூலமாக மலைக்கோயில் அடிவாரம், ரோப் கார் , சண்முகநதி பஸ் ஸ்டாண்ட் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் பஞ்சாமிர்தம் ஸ்டால்களை தேவஸ்தானம் மூலமாக வைக்கப்பட்டு அதன் மூலமாக முருக பக்தர்கள் பிரசாதத்தை வாங்கிச் சென்று வருகிறார்கள்.
இப்படி முருக பக்தர்கள் வாங்கிச் செல்லும் பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் பில் வழங்குவதில்லை. அதோடு அங்குள்ள செக்யூரிட்டிகள் கூடுதல் விலைக்கு பஞ்சாமிர்தத்தை விற்று மோசடி செய்வதாக பழனியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவித்துள்ளார்.
இதுசம்பந்தமாக பழனியை சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார் கூறும்போது, "பழனி முருகன் கோவில் சார்பில் பிரசாதமாக பஞ்சாமிர்த டப்பா அரை கிலோ 35 ரூபாய்க்கும் 40 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதற்கு பில் தரவேண்டும், ஆனால் தனியார் நிறுவன செக்யூரிட்டிகள் தருவதில்லை. கூடுதல் விலைக்கு விற்று ஊழல் செய்கின்றனர்.
எங்களது அமைப்பை சேர்ந்த வெளிமாநில பக்தர்கள் பஞ்சாமிர்த வாங்கும்போது பில் தராமல் 35 ரூபாய் விலைக்கு ஆறு பாட்டில்கள் வாங்கினர். அதற்கு 300 ரூபாய் பணம் வசூலித்து உள்ளனர். இதுதொடர்பாக இணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் தைப்பூசம் சபரிமலை, பங்குனி உத்தரம் நேரத்தில் வெளியூர் பக்தர்களை செக்யூரிட்டிகள் ஏமாற்றி பஞ்சாமிர்தத்தை கூடுதல் விலைக்கு விற்று வருமானம் பார்க்கின்றனர்.
அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி கோவில், சபரிமலை ஐயப்பன் கோவில் போல் பஞ்சாமிருதம் வாங்கும் முருக பக்தர்களுக்கு கம்ப்யூட்டர் பில் கண்டிப்பாக வழங்க வேண்டும்" என்று கூறினார்.