கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகனை தனிப்படை காவல்துறையினர் மங்களூருவில் கைது செய்தனர்.
கடந்த மே 14- ஆம் தேதி அன்று நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் ஆறு பேர் சிக்கிக் கொண்ட நிலையில், விரைவாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டனர். இதுவரை இருவர் உயிரோடு மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவரைத் தேடும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பெரிய அளவிலான பாறைகள் இருப்பதால், அவற்றை வெடி வைத்து தகர்த்து மீட்புப் பணியை மேற்கொண்டனர். விபத்து தொடர்பாக, ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்த கல்குவாரியின் உரிமையாளர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், மங்களூருவில் பதுங்கியிருந்த இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து, நெல்லைக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரிக்க காவல்துறைத் திட்டமிட்டுள்ளது.