உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் என்று கிராம ஊராட்சியில் தொடங்கி ஒன்றிய, மாவட்டக்குழு வார்டுகளிலும் போட்டிக்கு நிற்கிறார்கள். இந்தமுறை படித்த பட்டதாரிகள், பொறியாளர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவர்கள் கூட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் பணத்தை நம்பி போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சேர்மன் வேட்பாளர்களாக தங்களை நினைத்துக் கொண்டு கிராமங்களுக்கு மொத்தமாக பணம் கொடுப்பது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது என்று பலரும் பணத்தை நம்பி களமிறங்கி உள்ளனர். கடைசி நாட்களில் பணம் பட்டுவாடா செய்ய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இளைஞர்கள் பணம் கொடுக்க வேண்டாம், பணம் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள்.
சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களைப் போல உள்ளாட்சித் தேர்தலிலும் பணம் விளையாடத் தொடங்கிவிட்டது. இந்த நிலையில் தான் வாய்மொழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த இளைஞர்கள் சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் மறமடக்கி கிராமத்தில்கிராம நீர்நிலை பாதுகாப்பிற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்டு நீர்நிலைகளை சீரமைத்த மக்கள் செயல் இயக்கம் என்ற இளைஞர் அமைப்பினர் நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று பதாகைகள் அச்சடித்து பொது இடங்களில் வைத்ததுடன் தங்கள் வீட்டு சுவர்களில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..! என்று சுவரொட்டியும் ஒட்டி வைத்துள்ளனர். மேலும் இந்த சுவரொட்டிகள், பதாகைகளை சமூகவலைதளங்கள் மூலமும் பரப்பி வருகின்றனர். மேலும் வீடியோக்கள் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மறமடக்கி மக்கள் செயல் இயக்கம் இளைஞர்கள் கூறும் போது, குடிக்க தண்ணீர் இல்லை என்று கேட்டால் பணம் வாங்கிட்டு தானே ஓட்டு போட்டே என்று கேட்கிறார்கள். வாக்களித்த நமக்கு இந்த அவமானம் தேவையா? அதனால தான் நமது ஓட்டு விற்பனைக்கு அல்ல..! என்றும் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல..! என்றும் பதாகை வைத்ததுடன் குவாட்டருக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டுவிட்டு குடிக்கிற தண்ணீருக்காக அலையாதே..! என்று விழிப்புணர்வு வீடியோவையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளோம். இதேபோல ஒவ்வொரு கிராமத்திலும் இளைஞர்கள் முன்வந்தால் பணம் இல்லாமல் வாக்களிக்கும் நமது உரிமையை மீட்டெடுக்க முடியும் என்றனர்.
இந்த விழிப்புணர்வு இருந்தாலே நல்லது செய்ய நினைப்பவர்களை தேர்ந்தெடுக்கலாம்.