சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்று (18/06/2022) அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானத்திற்காக அமைக்கப்பட்ட தீர்மானக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ப.வளர்மதி, பொன்னையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வைத்திலிங்கம், சி.வி.சண்முகம், வைகைச்செல்வன், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், ஒற்றைத் தலைமை குறித்து தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியதாகவும், ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வலியுறுத்தியதாகவும் தகவல் கூறுகின்றன. வைத்திலிங்கம் கூறியதை அடுத்து நிர்வாகிகள் அமைதியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜே.சி.டி. பிரபாகர், "தீர்மானத்தில் ஒற்றைத் தலைமை குறித்து எதுவும் இல்லை; விவாதிக்கவும் இல்லை. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பி.எஸ். மிகுந்த வருத்தத்தில் உள்ளார். பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை வழங்கினார்" என்றார்.