ஆளும் அதிமுக அரசின் கொறடாவாக உள்ள தாமரை ராஜேந்திரன், அரியலூர் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ஓ.பி.எஸ். தனி அணியாக செயல்பட்டபோது அவருக்கு ஆதரவாக அரியலூர் மாவட்ட முன்னாள் செயலாளர் கவிதா ராஜேந்திரனுடன் பல நிர்வாகிகள் சென்றனர். பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். ஆகியோர் இணைந்ததும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அப்போது தாமரை ராஜேந்திரன் ஓ.பி.எஸ். அணிக்கு சென்றவர்களுக்கு பதவி வழங்கவில்லை என்றும், தற்போது நியமிக்கப்பட்டவர்களிடம் அன்பளிப்புகள் பெற்றுள்ளார் என்றும் கவிதா ராஜேந்திரன் ஆதரவாளர்கள் புகார் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தை ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அன்பளிப்புகள் பெற்று பதவி வழங்கிய தாமரை ராஜேந்திரனிடம் இருந்து மா.செ. பதவியை பறிக்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் கட்சியை குழி தோண்டி புதைக்கிறார் என்று முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் தலைமை கழக நிர்வாகிகள் அவர்களை தொடர்பு கொண்டு சமாதானம் செய்தனர். ஓ.பி.எஸ். ஆதவாளர்கள் முற்றுகையால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.