திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிலருக்கு நிவாரண பொருட்களை நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர் தலைமையில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வருகை தரும் தேன்மொழி சேகரை வரவேற்று ஓ.பி.எஸ் & ஓ.பி.ஆர் ஆர்மி அதிமுக இளைஞரணி என்று ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு சேவுகம்பட்டி பேரூராட்சி பகுதி முழுவதும் வரவேற்பு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதோடு இந்த நிகழ்ச்சிக்காக டோக்கன் கொடுக்கப்பட்டிருந்த 130 பேருக்கு நிலக்கோட்டை எம்எல்ஏ தேன்மொழி சேகர் தனது பங்கிற்கு 5 கிலோ அரிசி பைகளை அனுப்பியிருந்தார். சேவுகம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற இருந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே ஊர் முழுவதும் ஒட்டியிருந்த சுவரொட்டி விளம்பரம் காரணமாக டோக்கன் பெறாத மற்ற பெண்களும் நிவாரண பொருட்கள் வாங்க பேரூராட்சி அலுவலகத்தில் திரண்டனர்.
அதை தொடர்ந்து எம்எல்ஏ தேன்மொழி சேகர், ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் மாசாணம், முன்னாள் ஒன்றிய செயலாளர் மோகன் உள்ளிட்ட அதிமுகவினர் பொருட்களை வழங்கத் தொடங்கியதும் டோக்கன் வாங்கியவர்கள் வாங்காதவர்கள் என அனைவரும் ஒட்டு மொத்தமாக பொருள்களை வாங்குவதற்கு முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு தனியாக எடுத்து வைத்திருந்த நிவாரண பொருட்களை அங்கிருந்த உடன் பிறப்புக்கள் சிலர் எடுத்து கொடுக்க அருகிலிருந்த எம்எல்ஏ உதவியாளர் வெங்கடேசனுக்கும் உ.பி. களுக்கும் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கடைசியில் மாற்றுத்திறனாளிகள் பலருக்கு நிவாரண பொருட்கள் கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பினார்.
இதில் டென்ஷனான எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் நிலக்கோட்டையில் இருந்து மீண்டும் அரசி பைகளை வரவழைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கி விட்டுச் சென்றார். நிலக்கோட்டை தொகுதியில் உள்ள அனைத்து பகுதி தூய்மை பணியாளர்களுக்கும் ஒரு சில அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு மட்டும் அரிசி பைகளை வழங்கி சத்தமில்லாமல் சென்றுகொண்டிருந்த எம்எல்ஏ தேன்மொழி சேகர், சேவுகம்பட்டியில் ஊரையே கூட்டி வரவழைத்த ஓ.பி.எஸ் ஆர்மி போஸ்டரால் தர்மசங்கடத்திற்கு ஆளாகி விட்டார். அதோடு நிவாரணம் பொருட்கள் கிடைக்காமல் மக்களும் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.