
நீலகிரி மாவட்டம் உதகையில் நவம்பர் மாதத்தில் உறைபனி தொடங்கும் நிலையில், சுமார் 75 நாட்கள் தாமதமாக உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. சுமார் ஒரு வார காலமாகவே குளிரின் தாக்கம் அங்கு அதிகமாக இருக்கிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் குளிர் காணப்படுகிறது.
உதகையில் மட்டும் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காஷ்மீர் பகுதியில் காணப்படுவது போல உறைபனி படர்ந்து காணப்படுகிறது. வாகனங்கள் மீதும் புல்வெளி மீதும் பனி உறைந்து தேங்கி நிற்கும் புகைப்படங்களும் வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக உதகையில் இரண்டு டிகிரி செல்சியஸ் என இருந்த குளிர் நிலை இன்று ஒரேடியாக ஒரு டிகிரி செல்சியஸுக்கு கீழாகப் பதிவாகியுள்ளது.
உதகையின் தலைகுந்தாவில் இன்று ஜீரோ டிகிரிக்கு சென்றுள்ளது வெப்பநிலை. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவலாஞ்சி உள்ளிட்ட சில பகுதிகளிலும் இதேபோல ஜீரோ டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. பகல் நேரங்களில் 24 டிகிரி செல்சியஸ் என்பது அங்கு அதிகபட்ச வெப்ப நிலையாக உள்ளது.