திண்டுக்கல் மாநகராட்சி பூ மார்க்கெட் அருகே உள்ள அம்மா உணவகத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆய்வு செய்தார். உணவு தயாரிக்கப்படும் முறை, விநியோகிக்கப்படும் முறை குறித்து ஆய்வு செய்தார். பின்பு உணவகத்தில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டார்.
மேலும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் சலுகை விலையில் 39 வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன், "தமிழகத்தில் ஒருவருக்குக் கூட கரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என முதலமைச்சரும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் வீட்டினை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
பொதுமக்கள் வசதிக்காக அம்மா உணவகத்தில் மிகக் குறைந்த விலையில் உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவரின் ஏற்பாட்டின்படி, விலையேற்றத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 39 வகையான உணவுப் பொருட்கள் 2000 ரூபாய்க்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் சார்பில் 13 வகையான காய்கறிகள் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலமாக திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருப்பதை ஊக்குவிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மளிகை பொருட்கள், நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்களில் கொள்முதல் செய்யும் பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். பொதுமக்களுக்கு முதல் பரிசாக பிரிட்ஜ் ,இரண்டாம் பரிசாக இரண்டு பீரோக்கள், குக்கர் மற்றும் 100 பேருக்கு சேலை வழங்கப்பட உள்ளது" என்றார்.
இதில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் ராஜ்மோகன், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.