கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம், ஆன்டிமடம், ஜெயங்கொண்டம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் முந்திரி வனத்தோட்ட கழகத்திற்கு சொந்தமான வனப்பகுதிகளில் ஆறு லட்சம் பரப்பளவில் முந்திரி சாகுபடி நடைபெற்று வருகிறது.
இதை சாகுபடி செய்வதற்கு விடப்படும் வெளிப்படையான ஏல முறையை நீக்கி விட்டு, மத்திய அரசு மூலம் செயல்படும் எம்.எஸ்.டி.சி நிறுவனத்தை கொண்டு ஈ- ஆக்ஷன் மூலம் ஆன்லைன் ஏல முறையை அதிகாரிகள் அறிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குத்தகைதாரர்கள் 100 -க்கும் மேற்பட்டோர் விருத்தாசலம் முந்திரி வனத் தோட்ட கழகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆன்லைன் மூலம் ஏலம் எடுக்கும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிப்பதாக குத்தகைதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் விருத்தாச்சலம், ஜெயங்கொண்டம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதியிலிருந்து 100 -க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு எம்எஸ்டிசி நிறுவன அதிகாரிகள் ஆன்லைன் மூலம் ஏலம் எடுப்பது குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையில் எழுத படிக்க தெரியாத தங்களுக்கு ஆன்லைன் வர்த்தகத்தில் அனுபவம் இல்லை என்று கூறி 40-க்கு மேற்பட்ட குத்தகைதாரர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆனால் 20-க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் வெளிநடப்பு செய்யாமல், ஆன்லைன் ஏல முறையை ஆதரித்து செயல்விளக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர். முந்திரி குத்தகைதாரர்களுக்கு இடையே இரு வேறு விதமான கருத்துகளும், முரண்பாடுகளும் எழுந்ததால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.