
அண்மை காலமாகவே புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் பூட்டுகளை உடைத்துத் திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் புதுக்கோட்ட மாவட்டத்தில் நேற்று ஒரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது.
கீரமங்கலம் காவல் சரகம் பனங்குளம் வடக்கு பாலம் பேருந்து நிறுத்தம் அருகில் கடைவீதியில் உள்ள கடைகளை நேற்றிரவு வியாபாரம் முடிந்தது வழக்கம் போல் பூட்டிவிட்டு அனைவரும் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று அவர்கள் கடைகளைத் திறக்க வந்தபோது, மருந்தகம் உள்ளிட்ட இரு கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.

ஒரே வளாகத்தில் உள்ள மூவேந்தன் (45) என்பவரின் மருந்தகத்தின் பூட்டுகள் உடைத்து ரூ.22,600 ரொக்கத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதே வளாகத்தில் உள்ள குருசேவ் என்பவரின் பெட்டிக்கடை பூட்டுகளை உடைத்து ரூ.5000 பணம் மற்றும் சிகரெட் , பிஸ்கட் பாக்கெட்டுகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அத்துடன் கடைகளில் உடைக்கப்பட்ட பூட்டுகளையும் கையோடு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும், அந்த பகுதியில் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த கடையை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கீரமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் சம்பவ இடத்திற்குச் சென்று தடயங்களை சேகரித்து விசாரைனை செய்து வருகிறார். இதே போல கடந்த சில மாதங்களுக்க முன்பு கீரமங்கலம் காந்திஜி சாலையில் திமுக மாவட்ட பிரதிநிதி கணேசன் என்பவரின் மளிகைக் கடையின் பூட்டுகளை உடைத்து இதே போல பணம் சிகரெட் பாக்கெட்கள், பிஸ்கெட், பேரீச்சம்பழம் பாக்கெட்டுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.
கீரமங்கலம் பகுதியில் இதே முறையில் தொடர்ந்து திருடும் மர்ம நபர்களை போலீசார் இதுவரை கைது செய்யாததது குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.