வெங்காயத்தை உறித்தால் மட்டும் கண்ணீர் வராது, இப்போது வாங்க சென்றாலும் கண்ணீர் வருகிறது என்கிறார்கள் மக்கள்.
வாழ்க்கையில் நாம் அன்றாட சமையலுக்கு பயன்படுத்த பெரிய வெங்காயம் மிகவும் அவசியமானது. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக அதிகரித்தபடியே வருகிறது. டெல்லி ,சென்னை உட்பட பகுதியில் ரூ.70 முதல் ரூ .80 வரை பெரிய வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காயம் அதிகமாக விளையும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளில் கடந்த பருவ மழை அதிகமாக பெய்து வருகிறது. இதனால் அங்கு இருந்து வெங்காய வரத்து குறைந்து விட்டது. இதனால் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்திலும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. ஈரோட்டின் பிரதான காய்கறி சந்தையான நேதாஜி மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ஒன்றுக்கு ரூ.35 விற்ற பெரிய வெங்காயம். இந்த வாரம் வரத்துக் குறைவு எதிரொலியாக ரூ .60 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வெங்காய வியாபாரி சண்முகவேல் கூறும்போது , ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் நாளொன்றுக்கு 5 லாரிகளில் 16 டன் வீதம் 80 டன் வெங்காய மூட்டை வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவில் பலத்த மழை பெய்துள்ளதால் ஈரோட்டுக்கு வரும் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த வாரம் ரூ .35 -க்கு விற்ற பெரிய வெங்காயம் கிலோ ஒன்று இன்று ரூ. 60 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது " என்றார்.
பெரிய வெங்காயம் விலை ஏறினாலும் சின்ன வெங்காயத்தின் விலை ஏறவில்லை. சின்ன வெங்காயத்தின் வரத்து கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ளதால் பிரச்சனையில்லை கிலோ ரூ.35 விற்பனை செய்யப்படுகிறது. இது பொதுமக்களுக்கு குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது.