Skip to main content

போலீசாரின் அலட்சியம்?... கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தல்; இருவர் கைது!

Published on 10/01/2025 | Edited on 10/01/2025

 

ஆந்திராவில் இருந்து தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தங்கம் என கடல் வழி கடத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள கடற்பகுதியை கடத்தல் கும்பல்கள் கடத்தல்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்த கடத்தல்களைத் தடுக்க போலீசார் முயற்சிகள் எடுத்துப் பிடித்தாலும் கூட கட்டுப்படுத்த முடியாமல் தொடர்கதையாக உள்ளது.

ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகள், கார்கள், பார்சல் லாரிகள் ஆகியவற்றில் ரகசிய அறைகள் அமைத்து கடத்தி வரப்படும் கஞ்சா பண்டல்கள் கடற்கரையோர கிராமங்களில் பண்ணைவீடுகள், கொட்டகைகளில் வைத்திருந்து இரவு நேரங்களில் அதிவேகமாகச் செல்லும் பைபர் படகுகளில் இலங்கைக்கு கடத்திச் சென்று நடுக்கடலில் பண்டல்களை மாற்றிவிடுகின்றனர். இதற்கான கூலி லட்சங்களில் கொடுக்கப்படுகிறது. இது போன்ற கடத்தல்களில் கூலிக்காக செல்வோர் மட்டும் பிடிபடுகின்றனர் கடத்தல் முதலைகள் சிக்குவதில்லை. இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து ஒரு கன்டெய்னர் லாரியில் (டி.என். 31 ஏ.ஈ. 6114) சென்னை வழியாக கஞ்சா பண்டல்கள் கடத்தி வரப்படுவதாக கியூ பிராஞ்ச் ஆய்வாளர் உதயச்சந்திரன் குழுவினர் அந்த லாரியை பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் வந்த அந்த லாரி இன்று (10.01.2024) காலை புதுக்கோட்டை மாவட்ட கிழக்கு கடற்கரை பகுதியை நெருங்கியதும் புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து கோட்டைப்பட்டினம் காவல் சரகம் கொடிக்குளம் துணைமின் நிலையம் அருகே அந்த கன்டெய்னர் லாரியை போலிசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது உள்ளே மீன் பார்சல் ஏற்றப்படும் பிளாஸ்டிக் பெட்டிகளில் 320 கிலோ கஞ்சா பண்டல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே கஞ்சா பண்டல்கள், மற்றும் கஞ்சா பண்டல்கள் ஏற்றிச் சென்ற லாரியை கைப்பற்றியதுடன் லாரியில் இருந்த காரைக்கால் மேல வாஞ்சூர் விசாலாட்சியம்மன் கோயில் தெரு ராமகிருஷ்ணன் மகன் சிலம்பரசன் (வயது37), காரைக்கால் திருநள்ளாறு ரோடு பாரதியார் ரோடு கோவிந்தராஜ் மகன் பிரகாஷ் (வயது 37) ஆகிய இருவரையும் போலிசார் கைது செய்து கோட்டைப்பட்டினம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

இவர்கள் இருவரிடமும் தொடர்ந்த நடந்த விசாரனையில் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்படும் கஞ்சா பண்டல்களை ராமநாதபுரம் தொண்டிக்கு கொண்டு செல்வதாகவும் தொண்டி சென்ற பிறகு எங்கே இறக்க வேண்டும் என்று போனில் தகவல் வரும் அவர்கள் சொல்லும் இடத்தில் இறக்கி வைப்போம் என்றும் கூறியுள்ளனர். ஆந்திராவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாகக் கஞ்சா பண்டல்கள் அதிகமாகக் கொண்டுவரப்படுகிறது. அந்த வழியில் உள்ள செக்போஸ்ட்களில் பெயரளவிற்குத் தான் போலீசார் இருப்பார்கள் சோதனைகள் செய்வதில்லை. மேலும் இது போன்ற கன்டெய்னர்களில் கொண்டு செல்லும் போது மீன் பார்சல் போகிறது என்று சோதனை செய்யமாட்டார்கள் என்பதால் கிழக்குகடற்கரை சாலை வழியாக கடத்தல்கள் நடப்பதாக கூறுகின்றனர். கிழக்கு கடற்கரை சோதனைச்சாவடிகளில் பெயரளவிற்கு இல்லாமல் முறையாக வாகன சோதனைகள் செய்தாலே இது போன்ற கடத்தல்களைக் குறைக்கலாம் என்கின்றனர் விவரமறிந்த போலீசார். 

சார்ந்த செய்திகள்