ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது தண்ணீரில் கோலம் போட்டும், தமிழி எழுத்துகளில் பொங்கல் வாழ்த்து எழுதியும் மாணவிகள் அசத்தினர். பள்ளியில் இன்று (10.01.2025) நடந்த பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தின் போது மாணவிகள் பொங்கல் தொடர்பான கோலங்களைப் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளின் முன்பும் இட்டனர். இதில் ஆறாம் வகுப்பு மாணவிகள் தண்ணீரில் வரைந்த கோலமும், பழமையான தமிழி எழுத்து வாழ்த்தும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
தண்ணீரில் கோலம் :
ஒரு பெரிய தாம்பாளத்தில் மணல் பரப்பி அதன் மேல் கோலம் வரைந்து, மெழுகை சிறுசிறு துகள்களாகச் செதுக்கி அதன்மேல் பரப்பி பின்பு தாம்பாள தட்டை சூடு படுத்தினர். இப்பொழுது மேலே உள்ள மெழுகு உருகி ஒரு படலம் உருவாகியிருக்கும். அதன் மீது தண்ணீரை ஊற்றியபோது கோலம் தண்ணீரில் மிதப்பது போலத் தோற்றமளித்தது. பள்ளி மாணவ மாணவிகள் இதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர். இடைநிலை ஆசிரியர் தமயந்தியின் மேற்பார்வையில் மாணவிகள் சுபாஶ்ரீ, செல்வபிரீத்தி, தனுஶ்ரீ, விசாலினி ஆகியோர் இக்கோலத்தைச் செய்து அசத்தினர்.
தமிழியில் கோலம் :
பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்ற செயலர் வே.ராஜகுரு ஒவ்வொரு ஆண்டும் 25 மாணவர்களுக்கு தமிழி கல்வெட்டு எழுத்துகள் பயிற்சி கொடுத்து வருகிறார். இக்கல்வியாண்டில் இப்பயிற்சி பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் பெரிய பொங்கல் கோலம் வரைந்து அதன் நடுவில் 'பொங்கல் வாழ்த்து' எனவும், கோலத்தின் கீழே 'இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்து' எனவும் பழமையான தமிழி எழுத்துகளில் எழுதி அசத்தினர். இந்த இரு குழுவைச் சேர்ந்த மாணவிகளைத் தலைமையாசிரியர் மகேந்திரன் கண்ணன், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவ, மாணவிகளும் பாராட்டினர்.