



தமிழகத்தில் தொடர்ந்து வெங்காயத்தின் விலை உயர்ந்துகொண்டு வருகிறது. அதற்காக தமிழக அரசு 'பசுமை பண்ணை' கடைகளில் ரூ.45க்கு வெங்காயத்தை விற்பனை செய்துவருகிறது. ஆனால், அதிலும் சில இடங்களில் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில், இன்று சென்னை முகப்பேரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், 'வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்', 'ரேஷன் கடைகளில் காய்கறி, மளிகைப் பொருட்களை மானிய விலையில் வழங்கிட வேண்டும்' எனக் கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள், தங்கள் கழுத்தில் வெங்காயத்தை மாலையாக அணிந்தும், வட்டமாக அமர்ந்து ஒப்பாரி வைத்தும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைச் செயலாளர் வி.தனலட்சுமி, மாவட்டச் செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜூலியட், துணைத் தலைவர் பிச்சையம்மாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.