ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் ஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி கொலுசு உற்பத்தித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மக்களவையில் பேசினார்.
சேலத்தின் பாரம்பரிய தொழில்களுள் ஒன்றாக வெள்ளி கொலுசு உற்பத்தித் தொழிலைச் சொல்லலாம். பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பதுபோல திருமணம் முடித்துக் கொடுக்கும் பெண்ணை தங்கத்தால் அலங்கரித்துப் பார்க்க முடியாத ஏழைகள்கூட, காலில் வெள்ளி கொலுசு அணியவைத்து அனுப்புவர். அந்தளவுக்கு, வெள்ளி ஆபரணம் தமிழர் பாரம்பரியத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
சேலத்தைப் பொருத்தவரை, செவ்வாய்ப்பேட்டை பகுதிதான் வெள்ளியால் ஆன கொலுசு, அரைஞாண் கயிறு, மெட்டி, கைகாப்பு உள்ளிட்ட ஆபரணங்களை தயாரிப்பதில் முக்கிய கேந்திரமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளித் தொழில் கற்றுக்கொண்ட தொழிலாளர்கள்தான் இன்றைக்கு சிவதாபுரம், பனங்காடு, பழைய சூரமங்கலம், குகை, பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளிலேயே பட்டறையாக வைத்து கொலுசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் சிறியதும், பெரியதுமாக கிட்டத்தட்ட பத்தாயிரம் வெள்ளிப்பட்டறைகள் இயங்கி வருவதாகச் சொல்கிறார்கள் வெள்ளி கொலுசு தயாரிப்பாளர்கள். எல்லாமே குடிசைத் தொழிலாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனால்தான் கடந்த 1982ம் ஆண்டு முதல் இத்தொழிலுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், நடுவண் பாஜக அரசு வெள்ளி மீது விதித்த 3 சதவீத ஜிஎஸ்டி வரியால், இத்தொழிலை பெரிய அளவில் ஆட்டம் காண வைத்திருக்கிறது என்று குமுறுகிறார்கள்.
அத்தோடு, ஆன்லைன் சந்தையில் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெள்ளியும் வர்த்தகம் செய்யப்படுவதால், மத்தளத்திற்கு இருபக்கமும் அடி என்பதுபோல், இத்தொழிலை ரொம்பவே புரட்டிப் போட்டிருக்கிறது. அதனால் மூன்று லட்சம் பேர் வேலை செய்து வந்த இத்தொழிலில் இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலையின்றித் தவிக்கின்றனர். இந்த நிலையில்தான், ஜிஎஸ்டியில் வரிவிலக்கு மற்றும் ஆன்லைன் வெள்ளி வர்த்தகத்தை தடை செய்யக்கோரி, சேலம் எம்.பி. எஸ்.ஆர். பார்த்திபன் மக்களவையில் புதன்கிழமை (டிச. 11, 2019) குரல் கொடுத்திருக்கிறார்.
மக்களவையில் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெள்ளி கொலுசு உற்பத்தி செய்வதை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக குடிசைத் தொழில் போல மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள், நாட்டில் உள்ள பல மாநிலங்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த தொழிலில் ஆண்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் வேலையில்லாத பலர் நேரடியாக ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் இத்தொழிலை நம்பியே இருக்கிறது. சேலம் வெள்ளி தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு வெள்ளி கொலுசு மூலம் கிடைக்கும் வருவாயும் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதற்கு முன்பு, வெள்ளித்தொழிலுக்கு எந்தவித வரியும் விதிக்கப்படவில்லை. அண்மைக் காலமாக, ஆன்லைன் வர்த்தகத்தில் வெள்ளி வியாபாரம் வந்ததால், இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. ஆன்லைன் வர்த்தகத்தால் வெள்ளி விலையில் நிலையற்ற தன்மை ஏற்படுகிறது.
மத்திய அரசு வெள்ளி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால், தொழில் மேலும் நசிவடைந்துள்ளதோடு, பலர் வேலைவாய்ப்பையும் இழந்துள்ளனர். எனவே, மத்திய அரசு குடிசைத் தொழிலாக செய்யப்பட்டு வரும் வெள்ளி கொலுசு தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முற்றிலும் நீக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வெள்ளி வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். இவ்வாறு, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்பி பேசினார்.