சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது திண்டிவனம் நகரம். இந்த நகரத்தை கடப்பதற்காக சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு பக்கத்தில் இருந்தும் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் பஸ் நிலையம், சாலையோர பகுதிகளில் தள்ளுவண்டி கடைகள் உள்ளன. மேலும், அது ஏராளமான மக்கள் நடமாட்டம் உள்ள பகுதி.
இந்நிலையில், நேற்று பிற்பகல் சுமார் ஒரு மணி அளவில் 35 வயது வாலிபர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து திடீரென கீழே குதித்துள்ளார். அவரது தலை தரையில் மோதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் பாலத்தில் இருந்து கீழே குதிக்கும் அதேநேரத்தில் சாலையில் மொளசூரைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது மனைவி 42 வயது விமலா என்பவர் பஸ் பயணிகளுக்காக வெள்ளரிப் பிஞ்சுகளை கையில் ஏந்தியபடி விற்றுக்கொண்டிருந்தார்.
பாலத்தில் இருந்து கீழே குதித்த அந்த நபர், விமலா மீது விழுந்துள்ளார். இதில் விமலா படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த விமலாவை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டுள்ளார். பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர், அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த மனநலம் பாதித்தவர் ஆக இருக்கக் கூடும் என போலீஸ் தரப்பில் கருதுகின்றனர். அவர் அணிந்திருந்த சட்டை காலரில் மதுரையை சேர்ந்த டைலர் ஒருவரின் முகவரி இருந்துள்ளது. இறந்த நபர் யார், எந்த ஊர், இங்கு எப்படி வந்தார் என்பது குறித்து திண்டிவனம் நகர காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். பரபரப்பான திண்டிவனம் மேம்பாலத்தில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நகர மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.