தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் நிலையில் இன்றைய நாளில் (11/01/2025) தமிழக முதல்வர் பேரவையில் உரையாற்றினார்.
அவரது உரையில், ''தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவது தவறல்ல அனுமதிக்கப்பட்ட இடத்தில் அனுமதி கொடுத்த இடத்தில் போராட வேண்டும். குற்றங்கள் குறைந்து தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. புத்தாண்டு கால பாதாளத்தில் இருந்து தமிழகத்தை மீட்டு எடுத்து இருக்கிறோம். இன்னொரு பக்கம் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசைத் தொடர்ந்து புறக்கணித்தும் வஞ்சித்தும் வருகிறது.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை விதித்து அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சிரமங்களை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல் அந்தத் திட்டங்களை முடக்குகிற சூழ்நிலையை உருவாக்கி வைக்கிறது. ஒருங்கிணைந்த கல்வி இயக்கத்தின் கீழ் ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டிய 2,152 கோடி ரூபாய் இன்னும் நிலுவையில் இருக்கிறது.
ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளங்கள் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய பொறுப்பு. பள்ளிகளின் பராமரிப்பு மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி திட்டங்கள் செயல்படுத்துதல் ஆகியவற்றுக்கு இந்த திட்டத்தில் கீழ் வரக்கூடிய நிதியானது மிகவும் முக்கியமானது. எத்தனையோ தடவை நினைவூட்டி கேட்டிருக்கிறோம். இதுவரை மானிய உதவித் தொகை விடுவிக்கப்படவில்லை. இதன் விளைவாக இந்த செலவினங்களை மாநில அரசே தனது சொந்த வருவாயிலிருந்து மேற்கொண்டு வருகிறது. அதிமுகவினர் கருப்பு சட்டையை அணிந்த போது சிரிப்புதான் வந்தது. ஆளுநரை எதிர்த்தும், பாசிசத்தை எதிர்த்தும் அதிமுகவினர் கருப்பு சட்டையை அணிந்து போராடவில்லை. ஒன்றிய மத்திய அரசின் கல்விக் கொள்கையை கண்டித்து அதிமுக கருப்பு சட்டை அணிந்து இருந்தால் மகிழ்ந்திருப்பேன்'' என்றார்.