துறையூர் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் எரகுடி வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று காலை நடையை பூட்டி விட்டு, கோயில் அர்ச்சகர் கோயிலை ஒட்டியுள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். வழக்கம் போல் கோயிலை திறக்க வந்து போது, கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கோயிலின் உட்புறமுள்ள மண்டப பூட்டுகளை உடைத்து சுமார் ஒரு கிலோ வெள்ளி ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரிந்தது. அதில் மூலவருக்கு விஷேச காலங்களில் சாத்தப்படுகின்ற ஒரு கிலோ எடையளவில் செய்த வெள்ளியிலான தலா 2 கண்மலர்கள், காதுகள், கைகள், கால்கள், ஸ்ரீசூரணம் மற்றும் திருமண் ஆகியற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.