
ஜோலார்பேட்டை அருகே மூதாட்டியை கட்டையால் தாக்கியும் மிளகாய் பொடியை தூவியும் பட்டப்பகலில் ஐந்து சவரன் தங்க சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மண்டலவடி கூட்டுரோடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவருடைய மனைவி கனகா (60). இவர்கள் இருவரும் திருப்பத்தூர்-வாணியம்பாடி நெடுஞ்சாலை ஓரமாக விவசாய நிலத்தில் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணன் வெளியே சென்று விட்ட நிலையில் மூதாட்டி கனகா வீட்டின் வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அப்போது மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் மூதாட்டி மீது மிளகாய் பொடி வீசியதோடு, அவரை கட்டையால் தாக்கி அவர் கழுத்தில் இருந்த ஐந்து சவரன் நகையை பறித்துச் சென்றனர். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட மூதாட்டி கனகாவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் மூதாட்டி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் மூதாட்டி மீது மிளகாய்பொடி வீசி தாக்கி நகை பறிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.