நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளில் இடம்பெறும் மூலப்பொருட்களுள் முக்கிய இடம் வகிப்பது எண்ணெய். இந்த எண்ணெயிலேயே விதவிதமான வகைகள் உண்டு. அந்த எல்லா வகைகளையும் ஏதோவொரு வகையில் நாம் பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இது போதாதென்று ரீஃபைண்ட் ஆயில், எக்ஸ்ட்ரா அல்லது மைக்ரோ ரீஃபைண்ட் ஆயில், சாச்சுரேட்டட் ஃபேட் ஃப்ரீ ஆயில் என பல்வேறு பெயர்களில் எண்ணெய்களைத் தயாரித்து விளம்பரப்படுத்தி நுகர்வோரைக் குழப்புகின்றன நிறுவனங்கள்.
இந்த நிலையில்தான், நாம் பயன்படுத்தும் எண்ணெய் வகைகள் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது உணவுப்பாதுகாப்புத் துறையின் ஆய்வு. நாம் பயன்படுத்துவது நல்ல எண்ணெயா, நல்லெண்ணெயா என்ற குழப்பதை சரிசெய்யும் முயற்சியிலும் அது ஈடுபட்டுள்ளது. இதன்படி, சேலம், திருப்பூர், நாமக்கல் போன்ற தமிழ்நாட்டின் மேற்குமாவட்டங்களில் உள்ள 930 எண்ணெய் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து, அதில் 277 மாதிரிகள் உண்ணத்தகாத விளக்கு எண்ணெய், உணவுக்காக விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது உணவுப் பாதுகாப்புத் துறை. இதற்கு உண்ணத் தகுந்த, தகாத எண்ணெய் வகைகள் ஒரே இடத்தில் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவது உள்ளிட்ட பல காரணங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, உணவுப் பாதுகாப்புத் துறை இந்த விதிமீறல்களைக் கலைய பல்வேறு வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, உண்ணத் தகுந்த எண்ணெய்களில் எந்தவிதமான நுகர்வோர்க் கவர்ச்சிப் பெயர்கள் இடம்பெறக் கூடாது. விளக்கு எண்ணெய்ப் பாக்கெட்டுகள் அல்லது பாட்டில்களில் 30% அளவிற்கு விளக்குப்படம் இடம்பெற்றிருக்க வேண்டும். உண்ணத்தகுந்த, தகாத எண்ணெய்களை ஒரே அலமாரியில் வைத்து விற்கக்கூடாது. எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் நோயற்றவர்களாக இருக்கவேண்டும்.
இதுமட்டுமின்றி, தற்போது செக்கு எண்ணெய் வியாபாரம் சந்தையில் சூடுபறக்கிறது. சுகாதாரமானது, இயற்கையானது, மருத்துவ குணம் நிறைந்தது உள்ளிட்ட பல காரணங்களால் பிரபலமாகி இருக்கும் செக்கு எண்ணெய் மீதும் இந்த சந்தேகத்தை உணவுப் பாதுகாப்புத் துறை எழுப்பியுள்ளது. பெரும்பாலான இடங்களில் மக்கள் தாங்களே மூலப்பொருட்களைக் கொடுத்து எண்ணெய் ஆட்டக் கொடுக்கின்றனர். இருந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை உணவுப் பாதுகாப்புத்துறை முன்வைத்துள்ளது.
அரசு அமைப்புகள் சுகாதாரம் சார்ந்த விடயங்களில் காட்டும் அக்கறையை, நுகர்வோரும் பின்பற்றும் போதுதான் இதுபோன்ற ஐயங்களுக்கு இடமில்லாமல் போகும்.