Skip to main content

“திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை..” மனைவியை அடக்கம் செய்த தன்னார்வலர்களை நினைத்துக் கண்கலங்கிய முதியவர்..!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021

 

 old man thinking of the volunteers who buried his wife ..!

 

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணி(72), இவரது மனைவி பழனியம்மாள் (70). இவர்கள் இருவருமே மாற்றுத் திறனாளிகள். இவர்களுக்கென யாருமில்லாமல் ஆதரவற்ற நிலையில்தான் வாழ்ந்துவருகிறார்கள். இவர்கள் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு வெங்காய குடோனில் தங்கியிருந்தனர். மணி மட்டும் செட்டிகுளம் அருகிலுள்ள பாலதண்டாயுதபாணி கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று அங்கே வரும் பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் யாசகம் எடுத்துப் பசியாறி வந்தனர். 

 

ஊரடங்கு காரணத்தால் கோயில் மூடப்பட்டு இருவரும் உணவுக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்த தகவல் அறிந்த அப்பகுதியிலுள்ள நாட்டார்மங்கலம் ‘நம்மால் முடியும் நண்பர்கள் குழு’வினர் மணி, பழனியம்மாள் உள்ளிட்ட அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் யாசகம் எடுத்துச் சாப்பிடும் அனைவருக்கும் தேடிச்சென்று உணவளித்து பசியாசியாற்றி வந்தனர். வழக்கம்போல அக்குழுவினர் உணவு வழங்குவதற்காக நேற்று பழனியம்மாள், மணி தம்பதி தங்கியிருந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கே பழனியம்மாள் இறந்துவிட்டதாகக் கூறி அவரது கணவர் மணி கதறி அழுது கொண்டு இருந்துள்ளார்.

 

ஆதரவற்ற மணியின் பரிதாப நிலையைக் கண்டு நண்பர்கள் குழுவினரும் கண் கலங்கினார்கள். உடனடியாக தங்களது நண்பர்களுக்கு தகவல் அளித்தனர். அதனையடுத்து குழு நண்பர்கள் கூடிப் பேசி, இறந்துபோன பழனியம்மாளின் உடலை தாங்களே முன்னின்று அடக்கம் செய்வது என முடிவெடுத்தனர். அதன்படி அடக்கம் செய்வதற்குத் தேவையான பொருட்கள், இறுதிச்சடங்குக்கான முழு செலவையும் தாங்களே ஏற்றனர். மேலும், முதியவர் மணியை அவரது மனைவிக்கு இறுதிச் சடங்குகள் செய்ய வைத்து தங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல் மூதாட்டி பழனியம்மாளின் உடலை நல்லடக்கம் செய்தனர். ஆதரவற்ற மூதாட்டியை அடக்கம் செய்வதற்கு ஒன்றிணைந்து செயல்பட்ட நாட்டார்மங்கலம் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினரை கிராம மக்கள் அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள், அரசு அதிகாரிகள் உட்படப் பல தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள். 

 

“திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பதுபோல, ஆதரவற்று யாசகம் எடுத்துச் சாப்பிட்ட எங்களுக்கு இந்த பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளாக எங்களைத் தேடி வந்து உதவி செய்ததோடு; என் மனைவியின் உடலை அடக்கம் செய்வதற்கும் அந்த செட்டிகுளம் பாலதண்டாயுதபாணி என்ற இறைவனான முருகனே இந்தப் பிள்ளைகள் எங்களிடம் அனுப்பி உள்ளார்” என்று கண்கலங்கக் கூறுகிறார் இறந்து போன பழனியம்மாளின் கணவர் மணி. இரக்கமற்ற மனிதர்கள் வாழும் உலகில் இரக்கமுள்ள மனிதர்களும் இருக்கிறார்கள், இருக்கவே செய்வார்கள்.
 

 

சார்ந்த செய்திகள்