மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயிலும் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி (08.08.2024) பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் மருத்துவருக்கு எதிரான மற்றொரு தாக்குதல் சம்பவம் நடந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம், பவ்நகர் பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், தலையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், அந்த பெண்ணை காண்பதற்கு அவரது உறவினர்கள் சிலர் செருப்புகளை அணிந்தபடியே நோயாளிகள் அறைக்குள் வந்துள்ளனர். அப்போது அறையில் இருந்த மருத்துவர் ஜெய்தீப் சின்ஹ கோகில், அவர்களிடம் செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதில், உறவினர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள், மருத்துவரை கீழே தள்ளி அடித்து தாக்கியுள்ளனர். இதில் அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், சிகிச்சை பெற்று வந்த பெண் என அனைவரும் சேர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில், மருத்துவமனைக்கு வந்த போலீசார், மருத்துவரை தாக்கிய ஹிரேன் தங்கர், பவ்தீப் தங்கர் மற்றும் கவுசிக் குவடியா ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் மருத்துவரை தாக்கிய சம்பவம், அந்த அறையில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.