புரவி புயல் செயல் இழந்தாலும் அதன் தாக்கமாக டெல்டா மாவட்டங்கள் முதல் உள்மாவட்டங்கள் வரை தமிழகம் முழுவதும் கன மழை பெய்திருந்தது. இதனால் அறுவடைக்குத் தயாரான நெல் கதிர்களும் கதிர் பிடிக்கும் நெல் பயிர்களும் முற்றிலும் சேதமடைந்தது. இந்த நிலையில் தான், வெள்ளப் பாதிப்புகளை அரசு சிறப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள் என்று அதிகாரிகளையும் தமிழக அரசு அறிவித்தது.
இந்த அதிகாரிகள் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்த போது சூரியன் மறைந்துவிட்டது. நெடுவாசல் உள்ளிட்ட கிராமங்களில் டார்ச் லைட் வெளிச்சத்தில் பயிர்களைப் பார்வையிட்டு கணக்குகளை ஆய்வு செய்தனர். பகலில் ஆய்வு செய்தால்தான் பாதிப்புகள் தெரியும் இரவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சேதங்களைப் பார்த்தால் எப்படித் தெரியும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி வேளாண்துறை அதிகாரிகளை அனுப்பி மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார்.