பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பினை அறிவித்திருந்தது. அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சை அரிசி, சர்க்கரை அதனுடன் கரும்பும் வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகளிடமிருந்து அரசு அதிகாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்து வருகின்றனர். இன்று முதல் பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட இருக்கின்ற நிலையில், சில இடங்களில் அரசு அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் கரும்புகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேற்று கடலூரில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் அதிகாரிகள் கரும்புகளை கொள்முதல் செய்ய முன்வரவில்லை என தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளிடமிருந்து செங்கரும்புகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபடவில்லை எனக் குற்றம்சாட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உறுதி அளித்துச் சென்றனர்.