அரசு எவ்வளவோ நடவடிக்கை எடுத்தாலும் ரேசன் அரிசிக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்கமுடியவில்லை. அதனால் மாற்றுச் சிந்தனையில் தமிழக அரசு இருக்கிறதாம்.
தற்போது உ.பி. அரசு, கார் வைத்திருப்பவர்கள், குளிர்சாதன வசதி வைத்திருப்பவர்கள் தொடங்கி, வருமான வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், அரசுப்பணியில் இருப்பவர்கள் என, நடுத்தட்டுக்கு மேல் இருப்பவர்களுக்கு இனி ரேசன் பொருட்கள் இல்லை என்று அறிவித்திருப்பதோடு, இவர்கள் அனைவரும் தங்கள் ரேசன் அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.
இதைப் பார்த்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள், புதிய கோணத்தில் யோசிக்க ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து, உணவுத்துறையில் உள்ள ஒரு உயர் அதிகாரியிடம் நாம் கேட்டபோது “தமிழகத்தில் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் 5 வகையான குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 2 கோடியே 22 லட்சத்து 19 ஆயிரத்து 221 பேர், ரேசன் கடைகளில் சீனி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்களைக் குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர். மேலும், ஒரு குடும்பத்திற்கு மினிமம் 12 கிலோ முதல் 20 கிலோ வரை இலவச அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இலவச அரிசியை ஏழை எளிய மற் றும் நடுத்தர மக்கள் ஒன்றரைக் கோடி பேர் வரை வாங்கிப் பயனடைந்து வருகின்றனர். மீதியுள்ள 70 லட்சத்துக்கும் மேலானவர்கள், இலவச அரிசியை வாங்குவதில்லை. எனினும், இவர்கள் அந்த இலவச அரிசியையும் வாங்கிவிட்டதாகக் கணக்குக் காட்டிவிட்டு, ரேசன் ஊழியர்களே கள்ளச்சந்தை யில் அதை விற்றுக் கல்லா கட்டிவிடுகிறார்கள். இந்த அரிசிதான் லாரி, வேன், ரயில்கள் மூலமாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகிறது. இதை அங்கே பாலிஷ் செய்து எடுத்துவந்து, ஆந்திரா பொன்னி, கர்நாடகா பொன்னி என மீண்டும் தமிழகத்திலேயே கிலோ ரூ.50 வரை விலை வைத்து விற்கிறார்கள்''” என்று திகைக்க வைத்ததோடு, "இந்த அரிசிக் கடத்தலுக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டு மென்றால், இங்கும் அரசு ஊழியர்கள், வசதி படைத்தவர்கள், வருமான வரிசெலுத்துபவர்கள், பெரும் விவசாயிகள் ஆகியோர், வழக்கம் போல் ரேசன் சலுகைகளை அனுபவித்துக் கொள்ளலாம். அதேநேரம், இவர்கள் ரேசன் பொருட்களோடு இலவச அரிசியையும் வாங்கத் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால் ரேசன் அரிசிக் கடத்தல் என்பது நின்றுவிடும். அதனால் இது குறித்து தமிழக அரசு யோசித்துக்கொண்டு இருக்கிறது. நாங்களும் எங்கள் கருத்தைத் துறை அமைச்சர் மூலம் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்''” என்றார் அழுத்தமாய்.
திண்டுக்கல் மாவட்ட அரசு அலுவலர் ஒன்றிய மாவட்டத் தலைவர் பார்த்தசாரதி, "தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நான்கு பிரிவுகளில் பணிபுரிகின்றனர். இதில் ஏ மற்றும் பி பிரிவுகளில் உயர்மட்ட அதிகாரிகளும், சூப்பிரண்டுகளும், அலுவலர்களும் வருகின்றனர். இவர்கள் யாருமே இலவச அரிசியையும் மற்ற பொருட்களையும் ரேசனில் வாங்குவதில்லை. இவர்களுக்குக் கீழுள்ள அரசு ஊழியர்களிலும் பெரும்பாலானோர் இலவச அரிசியை வாங்குவதில்லை. எனவே, இதையெல்லாம் கணக்கில் கொண்டு, அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளிடம் முதல்வர் கலந்து பேசினாலே சரியான தீர்வு கிடைத்துவிடும்'' என்கிறார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சண்முகம் நம்மிடம், "வசதிபடைத்தவர்களுக்கு இலவச அரிசி கிடையாது என்று அரசு கூறினால், அதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏற்கனவே தேர்தல் வாக்குறுதியில் ஏழை எளியவர்களுக்கு ஒரு கிலோ உளுந்தும், ஒரு கிலோ சீனியும் கூடுதலாகத் தருவதாக முதல்வர் கூறியிருக்கிறார். அதனால் விரயத்தைக் கட்டுப்படுத்தி, அவர் அறிவித்த திட்டத்தைச் செயல்படுத்தலாம்” என்கிறார்.
"தமிழக தேசிய விவசாயிகளின் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவர் சீனிராஜ், "இங்கே தேங்காய் உற்பத்தி அதிகரித்து, உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். உடலுக்குக் கேடான பாமாயில் இறக்குமதியை நிறுத்திவிட்டு, ரேசனில் தேங்காய் எண்ணெயை மக்களுக்கு விநியோகிக்கலாம்'' என உபரி ஆலோசனையையும் சொன்னார்.
இதுசம்பந்தமாக உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியிடம் நாம் கேட்டபோது, "தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த ஓராண்டில் மட்டும், 12,91,876 பேர் இறந்தவர்கள் என்று கண்டுபிடித்து அவர்கள் பெயரை நீக்கியிருக்கிறோம். அதேபோல் 2,24,470 குடும்ப அட்டைகள், பொது விநியோகத் திட்டத் தரவுத் தொகுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த ஓராண்டில் மட்டும் நாங்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையால், 7,41,000 டன் அரிசி குறைவாக நுகர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒன்றிய அரசுக்கு 2,633 கோடி ரூபாய் மீதமாகியுள்ளது. நம் தமிழக அரசுக்கு 1,600 கோடி ரூபாய் அளவுக்கு மீதமாகியுள்ளது. இதேபோல், ரேசனை முறைமை செய்வது பற்றியும் உரிய நேரத்தில் முதல்வர் முடிவெடுப்பார்'' என்றார் நம்பிக்கையோடு.
நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.