தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக கடந்த வாரம் நடைபெற்றது. ஒரு லட்சம் பதவிகளுக்கு நடைபெற்ற இந்த தேர்தலில் 75 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (12.10.2021) காலை முதல் எண்ணப்பட்டுவருகிறது. இதுவரை 99 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. இதில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
140 மாவட்ட கவுன்சிலர்களில் திமுக 138 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. 1,381 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 1,009 இடங்களிலும் அதிமுக 215 இடங்களிலும் முன்னணியில் இருந்துவருகிறது. பாமக 47 இடங்களிலும், அமமுக 5 இடங்களிலும், தேமதிக ஒரு இடத்திலும் முன்னணியில் இருந்துவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட, ஒன்றிய தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்த வரையில் பல்வேறு சுவாராசிய சம்பவங்களுக்கும் குறைவில்லை. கமல் மற்றும் சீமானின் கட்சிக்கு இந்த தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அதைப்போல அதிமுக 2 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸ், விசிக தலா ஐந்து மற்றும் மூன்று இடங்களில் வென்று அதிமுகவை விட அதிக மாவட்ட உறுப்பினர்களைப் பெற்றுள்ளது.