வனத்துறையினரின் 7 நாள் போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டுள்ளது உடைந்த கொம்பு சங்கர் யானை.
நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே மூன்றுபேரைக் கொன்ற காட்டுயானையான உடைந்த கொம்பன் சங்கரைப் பிடிக்கக் கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி கடந்த மாதம் உடைந்த கொம்பு சங்கரை பிடிக்க வனத்துறையினர் முயற்சித்தபோது யானையானது அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. அதனையடுத்து உடைந்த கொம்பு சங்கரை பிடிக்கும் பணி கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அண்மையில் மீண்டும் நீலகிரியின் சேரம்பாடி பகுதிக்கு வந்த உடைந்த கொம்பனால் அப்பகுதியில் அச்சம் நிலவியது. அதனைத் தொடர்ந்து உடைந்த கொம்பு சங்கர் யானையைப் பிடிக்க வனத்துறை சார்பில் பல்வேறு கும்கி யானைகள் ஏற்பாடு செய்யப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கடந்த ஏழு நாட்களாக வனத்துறையினர் யானையைப் பிடிக்க போராடி வந்த நிலையில், நேற்று (12.02.2021) நீலகிரியின் 10 லைன் வனப்பகுதி என்ற இடத்தில் கும்கி யானைகள் உதவியுடன் சங்கர் பிடிக்கப்பட்டது.
கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட சங்கர் யானை, கயிறுகள் மூலம் கட்டப்பட்டு 5 கும்கி யானைகள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை யானைகள் காப்பகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மரக் கூண்டில் அடைக்கப்பட்டது. உடைந்த கொம்பன் சிக்கியதால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர் சேரம்பாடி மக்கள்.