கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா மருத்துவமனையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 65 ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் ஒப்பந்த கால பணி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 25 பேர் பல்வேறு காரணங்களால் தற்போது பணியில் இல்லை. மீதி 40 பேர் கடந்த 7 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து 3 வருடம் ஆள் பற்றாக்குறை இருந்த நேரத்தில் பணியாற்றி நிலைமையைச் சரி செய்துள்ளனர்.
இந்த நிலையில், என்எல்சி இந்தியா நிர்வாகம் பணி நிரந்தரப்படுத்தும் பணியில் 40 பேரில் 15 பேருக்கு மட்டும் நிரந்தர பணி வழங்குவதாகவும் மீதி உள்ள 25 பேருக்கு பணி வழங்க மறுத்துள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட என்எல்சி நிர்வாக அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என செவிலியர்கள் மத்தியில் கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட ஆண் செவிலியர்கள் 10, பெண் செவிலியர்கள் 15 மொத்தம் 25 பேர் கடந்த 4-ந் தேதி முதல் மருத்துவமனை வளாகத்திற்கு முன்பு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு அனுமதி இல்லை எனக் காவல்துறையினர் மறுத்துள்ள நிலையில் இவர்கள் இரவு, பகல், வெய்யில் மழையை பாராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் மழை பெய்தாலும் குடையைப் பிடித்துக்கொண்டு வெய்யில் மழையில் குழந்தைகளுடன் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதைப் பார்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, சிஐடியு உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகளைச் சார்ந்தவர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து செவிலியர் சுதா கூறுகையில், என்எல்சி இந்தியா மருத்துவமனை நிர்வாகம் கடந்த 2016 பேப்பரில் விளம்பரம் வெளியிட்டது. அதன் பேரில் விண்ணப்பித்தோம். பின்னர் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது நாங்கள் அனைவரும் ஒப்பந்தகால பணி அடிப்படையில் பணியில் சேர்ந்தோம். பணியில் சேர்ந்து அப்போது முதல் இப்போது வரை ரூ. 13 ஆயிரம் கூலி பெற்று வருகிறோம். விடுமுறை எடுத்தால் கூலி இல்லை. இந்த நிலையில் எங்களை நீக்கிவிட்டு இதே இடத்திற்கு மற்றவர்களை நியமித்துள்ளார்கள். நாங்கள் கடந்த 7 ஆண்டுகளாக மிகவும் சொற்ப வருமானத்தில் கொரோனா காலத்தில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றினோம். ஆனால் தற்போது நிர்வாகம் எங்களை அவர்களின் விதிக்குப் பொருந்தவில்லையென நிரந்தர பணி வழங்க மறுக்கிறார்கள். 7 வருடத்திற்கு முன்பு எந்த விதி இவர்களுக்குப் பொருந்தியது எங்களைப் பணிக்குச் சேர்த்தார்கள் தற்போது எங்கள் உழைப்பை எல்லாம் சுரண்டிவிட்டுத் தற்போது பணி நிரந்தரம் இல்லை என்கிறார்கள். இனிமேல் நாங்கள் எங்கே போய் வேலை செய்வது. எனவே மீண்டும் வேலை கிடைக்கும் வரை உயிரே போனாலும் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகக் கூறினார். இந்தப் போராட்டத்தில் செவிலியர் மஞ்சுளா, உஷா, சத்யா ஆகிய மூன்று பேரும் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.