கட்சியினர் யாரும் யாரையும் மனம் புண்படும்படி பேசக் கூடாது என்று திருக்குறளை மேற்கோள் காட்டி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுரை கூறினார்.
சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக். 27 அன்று நடந்தது. முன்னாள் முதலமைச்சரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார்.
அவர் பேசியதாவது, "தமிழ்நாட்டில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலின்போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ அதேபோல மாநகராட்சி, நகராட்சித் தேர்தலிலும் பணியாற்ற வேண்டும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சில இடங்களில் சிறப்பாக பணியாற்றாதபோதும் கூட வெற்றி பெற்றுவிட்டோம்.
தமிழ்நாட்டிலேயே சேலம் மாநகராட்சிக்கு அதிகளவிலான நிதி ஒதுக்கி நமது ஆட்சியில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினோம். தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக்கட்சிக்கு செல்வதோ, சுயேச்சையாக போட்டியிடுவதோ கூடாது.
இன்னும் பத்து நாட்களுக்குள் பகுதி செயலாளர்களை அழைத்துப் பேசுவேன். பூத் கமிட்டி அமைத்து, அதில் அவர்களின் பெயருடன் செல்ஃபோன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும். காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே நேரடியாக பேச இருக்கிறேன். எனக்கு வயிற்று வலி இருக்கிறது. அதையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன். ஏனெனில் நமக்கு வெற்றிதான் முக்கியம்.
கடந்த காலங்களில் நான், செம்மலை போன்றோர் மக்களிடம் ஓட்டு கேட்டுச் சென்றால், உங்களுக்கு மட்டும்தான் ஓட்டு போடுவேன் என்று கூறுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் யார் ஓட்டு கேட்டுச் சென்றாலும், அவர்கள் அனைவரிடமும் உங்களுக்குத்தான் ஓட்டு போடுவேன் என்கிறார்கள். சுயேச்சை வேட்பாளர் வாக்கு சேகரிக்கச் சென்றால்கூட அவர்களிடமும் மக்கள் அதையேதான் சொல்கின்றனர். ஆனால் ஓட்டு யாருக்குத்தான் போடுகிறார்கள் என்று தெரியவில்லை. மக்கள் மனதை எளிதில் புரிந்துகொள்ளவே முடியவில்லை.
வயிற்று வலி பிரச்சனைக்காக எனக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தனர். அப்புறம் ரத்தப் பரிசோதனை செய்தனர். இப்போது, மருத்துவமனையில் அட்மிட் ஆகச் சொல்கிறார்கள். ஒரு வியாதியை கண்டுபிடிக்கவே இத்தனை டெஸ்டுகள் எடுக்க வேண்டியதிருக்கும்போது, மக்கள் மனசை மட்டும் எப்படி எளிதில் புரிந்துகொள்ள முடியும்?
அதனால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரும் யாரைப் பற்றியும் தவறாகப் பேச வேண்டாம். 'தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு' என திருவள்ளுவர் கூறியுள்ளார்.
தீயில் சுட்டப்புண் ஆறிவிடும். ஆனால் கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணர்ந்து பேச வேண்டும். பிறர் புண்படும்படி பேசக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றிக்கு உழைக்க வேண்டும்." இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இக்கூட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.