அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று கருத்து கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துவிட்டது. இந்நிலையில், நாளை (28-2-2019) இந்த வழக்கில் மதுரை மத்திய சிறையிலிருக்கும் நிர்மலாதேவியை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும். பிணையில் வெளிவந்திருக்கும் உதவிப் பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும் கூட ஆஜராக வேண்டியதிருக்கிறது.

கடந்த தடவை, நிர்மலாதேவியை இதே ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, காக்கிகள் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலாதேவியைப் பேசவிடாமல், அப்போது கடுமையாக நடந்துகொண்டது காவல்துறை. ஆனாலும், ஏதோ பேச முயன்றார் நிர்மலாதேவி. எங்கிருந்து வந்த உத்தரவோ, அதனைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காக, நிர்மலாதேவியைப் படமெடுக்க விடாமல், அவரைப் பேசவும் விடாமல் செய்தனர். அந்தக் களேபரத்தில், நக்கீரன் நிருபரையும், சன் டிவி நிருபரையும் பணி செய்யவிடாமல், போலீசார்கள் தாக்கவும் செய்தனர். மற்ற செய்தியாளர்களும் காவல்துறையின் பலப்பிரயேகத்துக்கு ஆளானார்கள்.
நிர்மலாதேவி வழக்கில் கடந்தமுறை செய்தியாளர்களிடம் போலீசார்கள் நடந்துகொண்டவிதம், தமிழகத்தில் அதிர்வலைகளை உண்டுபண்ணியது. தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. காவல்துறைக்குப் பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிட்ட வழக்கு என்பதால், தற்போது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன், நிர்மலாதேவியை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துவதற்கு அனுமதிக்க வேண்டி நீதித்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நிர்மலாதேவி நேரடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரா? அல்லது வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராவாரா? என்பது நாளை தெரிந்துவிடும்.