அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று கருத்து கூறியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்துவிட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் முருகனும், கருப்பசாமியும் ஆஜரானார்கள். முருகன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். மதுரை மத்திய சிறையில் இருந்து நிர்மலாதேவி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜராக ஏற்பாடு செய்யப்பட்டது. வழக்கு விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு வந்த முருகனிடம், வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, வழக்கு நிலுவையில் இருப்பதால் எதுவும் சொல்ல முடியாது என்றார்.
நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் செய்தியாளர்களிடம், ''கடந்த முறை நீதிமன்றத்திற்கு நிர்மலா தேவி வரும்போது, போலீசார் கடுமையாக நடந்து கொண்டார்கள். அதையும் மீறி நிர்மலா தேவி பேச முற்பட்டதால் மதுரை மத்திய சிறைக்கு செல்லும் வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நிர்மலா தேவி சென்ற வேனை நிறுத்தினார்கள். அந்த போலீஸ் வாகனத்தை பின் தொடர்ந்து சென்ற சிபிசிஐடி போலீசார், அந்த வேனில் ஏறி, ''தப்பித்து ஓடியதாக கூறி உன்னை இங்கேயே சுட்டுவிட்டால் என்ன பண்ணுவ'' என்று வேனுக்குள் வைத்து நிர்மலா தேவியை அடித்துள்ளனர். மத்திய சிறைக்கு சென்ற அவர், உயிரோடு வாழ வேண்டுமா? என்று தற்கொலைக்கு முயன்றார். மேற்கொண்டு அங்கு அவருக்கு டார்ச்சர் நடந்துள்ளது. அவரது உடலில் காயங்கள் உள்ளது. இன்று நேரடியாக அவரை அழைத்து வந்தால் அவர் மீது உள்ள காயங்களை பத்திரிகையாளர்கள் பார்த்துவிடுவார்கள் என்பதால் அவரை அழைத்து வரவில்லை. செசன்ஸ் கோர்ட் வழக்குகளில் வாய்தாவின்போது விசாரணை கைதிகளை வீடியோ கான்ஃபரன்ஸில் ஆஜராக வைப்பது நடைமுறையில் இல்லாதது. இது ஆச்சரியமாக இருக்கிறது'' என்றார்.
மதுரை ஐகோர்ட் இந்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்துள்ளது குறித்து கேட்டதற்கு, ''அதை வரவேற்கிறேன். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அந்த வழக்கை நிர்மலா தேவி எதிர்கொள்வார்'' என்றார்.
நிர்மலாதேவியை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் என்று நேற்றே நக்கீரன் இணையதளத்தில் பதிவிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
-சி.என்.ராமகிருஷ்ணன்
படங்கள்: அண்ணல், ராம்குமார்