ஊத்தங்கரை அருகே, கட்டடத் தொழிலாளி கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள முக்கரம்பள்ளி மேட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் திருப்பதி (27). இவருடைய மனைவி ஊர்மிளா. கணவருடன் ஏற்பட்ட தகராறில், கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஊர்மிளா தற்கொலை செய்து கொண்டார். திருப்பதி, மாற்றுத்திறனாளியான சகோதரியுடன் அதே குடிசை வீட்டில் வசித்து வந்தார்.
போதிய வேலையும், வருமானமும் கிடைக்காததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்குச் சென்று, அங்கு கட்டடத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 5 நாள்களுக்கு ஊத்தங்கரைக்கு வந்திருந்தார்.
இந்நிலையில், நவ. 13ம் தேதி அதிகாலை நான்கு மணியளவில், வீட்டில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சாமல்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் காவல் ஆய்வாளர் முத்தமிழ் செல்வன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு உள்ளூரில் சில பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் ஏற்பட்ட மோதலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. மேலும், திருப்பதியின் சகோதரியைப் பார்க்க மர்ம நபர் ஒருவர் வீட்டுக்கு வந்து சென்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நபர் யார் என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.