Skip to main content

தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
 NIA raids at 11 places in Tamil Nadu

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உட்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 'ஹிஜ்புத் தகர்' என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சென்னை இளைஞரின் செயல்; பாய்ந்தது புதிய குற்றவியல் சட்டம்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Bathing video incident;  Chennai Youth Arrested Under New Penal Code

ஜூலை ஒன்றான நேற்று முதல் நாடு முழுவதும் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளது. புதிய குற்றவியல் நடைமுறை சட்டங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முதன் முதலாக டெல்லியில் பாதசாரியில் கடை வைத்திருந்த நபர் மீது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக முதல் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் சென்னையில் முதன்முறையாக இளைஞர் மீது புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்த புகாரில் 'பாரதிய நியாய சன்ஹீதா' சட்டத்தின் படி போலீசார் கைது செய்துள்ளனர். சாரதி என்ற அந்த நபருக்கு பழைய சட்டப்பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல், அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய சட்ட பிரிவிலும் அதே தண்டனை குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இருப்பினும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து தண்டனை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மத்திய அமைச்சருடன் தமிழக எம்.பி.க்கள் சந்திப்பு!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Tamil Nadu MPs meet with the Union Minister!

மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவைத் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதி மணி, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் இன்று (01.07.2024) சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

மத்திய அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், “திருச்சி பன்னாட்டு விமான நிலைய புதிய கட்டிடத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டிடம் இரண்டு வாரங்களுக்கு முன்பாக பயன்பாட்டிற்கு வந்தது. கூடுதல் பயணிகளின் வருகைக்காகவே இந்தப் புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. கூடுதல் விமானச் சேவைகள் வழங்கப்பட்டால் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனால் அதிக எண்ணிக்கையில் விமானங்களை இயக்குவதற்குத் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போதிய ஓடுதள வசதி இல்லை. ஆகவே, விமான ஓடுபாதை விரிவாக்கப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்கத் தேவையான நிதியை வழங்க வேண்டும். 

இரண்டாவதாக, இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின்படி (BASA), திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானச் சேவை வழங்கிட அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. திருச்சியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மட்டுமே துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு இயக்கப்படுகிறது. வாராந்திர சேவை அடிப்படையில் ஒரு வாரத்திற்கு 3760 இருக்கைகள் மட்டுமே இந்த விமானத்தில் நிரப்பப்படுகின்றன. இதனால் பயணக் கட்டணமும் பல மடங்கு அதிகமாக உள்ளது. ஆகவே, வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர் பெங்களூர், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து விமானச் சேவையைப் பயன்படுத்துகின்றன. இதனால், திருச்சி விமான நிலையத்திற்கு வர வேண்டிய வருவாய் பெங்களூர், கொச்சின் போன்ற விமான நிலையங்களுக்குச் சென்று விடுகின்றன.

எனவே, திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்குக் கூடுதல் விமானங்களை இயக்க இருதரப்பு விமான சேவை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்கள் பயனடைவதோடு திருச்சி விமான நிலையத்திற்கு வருவாயும் அதிகரிக்கும். அதேபோல, திருச்சியில் இருந்து டெல்லிக்கு நேரடி விமானச் சேவை இல்லை. ஆகவே, டெல்லியில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து கொச்சினுக்கும் விமானங்களை இயக்கிட வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால், திருச்சி மாவட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள், கரூர், பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட அருகாமை மாவட்ட மக்களுக்கும் பெரும் பயன் விளைவிப்பதாக இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tamil Nadu MPs meet with the Union Minister!

மேலும் இந்த சந்திப்பு தொடர்பாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி.,“மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவின் தந்தை மறைந்த  கிஞ்சராபு எர்ரான் நாயுடு, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் நெருங்கிய நண்பர் ஆவார். அமைச்சர் ராம்மோகன் நாயுடு, வைகோவின் உடல் நலத்தை மிகுந்த அக்கறையுடன் கேட்டறிந்தார். அதோடு வைகோ டெல்லிக்கு வரும்போது நேரில் வந்து சந்திக்கிறேன் எனவும் தெரிவித்தார். திருச்சி விமான நிலைய சேவைகள் தொடர்பாக நாங்கள் தெரிவித்த கோரிக்கைகளைக் கண்டிப்பாக நிறைவேற்றித் தருவதாகவும் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு உறுதியளித்தார்” எனத் தெரிவித்துள்ளார்.