அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். இவர் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவராக உள்ளார். பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் இவர் எப்போதும் பச்சை நிற வேஷ்டி சட்டை மற்றும் பச்சை நிற தலைப்பாகை அணிந்து இருப்பார்.
நம்மாழ்வார் கொள்கையை பின்பற்றி மாநிலம் முழுவதும் பசுமையை காக்கவும் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க வேண்டியும், இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்று நூதன முறையில் பல்வேறு பிரச்சாரங்களை செய்து வருகிறார். அதேபோன்று நீர்நிலைகளை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் அவரது சொந்த ஊரான கீழகாவட்டாங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வேட்பு தாக்கல் செய்தார். அப்போது அவர், கிராமத்தை பசுமை கிராமமாக மாற்றுவேன் என்ற உறுதி மொழியுடன் மரக்கன்றுகளை ஏந்தி ஊர்வலமாக வந்து திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நுழைந்தார். அப்போது அங்கே இருந்த போலீசார் மரக்கன்றை உள்ளே எடுத்து செல்ல கூடாது என்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து மரக்கன்றை வெளியே வைத்து விட்டு, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனுதாக்கல் செய்தார். மரக்கன்றுடன் வந்து நூதன முறையில் மனுதாக்கல் செய்தது அப்பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது