கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தி.மு.கதலைமையில், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்திற்கு புவனகிரி சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் சரவணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சரும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியைச்சார்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.கேபன்னீர்செல்வம், தி.மு.க.வின் ‘ஒன்றிணைவோம் வா’ இணையவழி உறுப்பினர் சேர்க்கையின் மூலம் இதுவரை 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். ஸ்டாலினின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஆட்சி மாற்றத்திற்கான அடிகோளாக உள்ளது. தனிப்பட்ட ஒவ்வொருவரும் தி.மு.க.வின் கொள்கைகளை உணர்ந்து தாங்களாகவே இணையவழி மூலமாக, தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். 2021 ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையப்போகிறது. தமிழகத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுள்ளது. செய்திளாரைக் கொலை செய்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதிலிருந்தே தெரிகிறது சட்டம் ஒழுங்கு. திறமையற்ற ஆட்சி நிர்வாகம், ஊழல் ஆட்சியாக இது உள்ளது. இதனை மக்கள் அகற்றும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்று கூறினார். இவருடன் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. சரவணன்இருந்தார்.