Skip to main content

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தின் அடுத்த ஸ்டெப்!!!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

ias

 

'லஞ்சம் தவிர்த்து.. நெஞ்சம் நிமிர்த்து!' என லஞ்ச, ஊழலுக்கு எதிராகக் குரலெழுப்பியவர், இன்று விருப்ப ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம். நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவராக இவர் பணியாற்றியபோது லஞ்சம் பெறுவதற்கு இவர் தடையாக இருக்கிறார் என்று வி.ஏ.ஓ.க்கள், தாசில்தார்களே இவருக்கு எதிராகப் போராடினார்கள். மதுரை கிரானைட் கனிம வளக் கொள்ளையைத் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்து கொள்ளை அதிபர்களைக் கைது செய்தார்.

 

அரசுத்துறை அதிகாரியாக சாதனைபுரிந்த சகாயத்தின் நலம்விரும்பிகள், அவரின் நேர்மையால் ஈர்க்கப்பட்டவர்கள் 'மக்கள் பாதை' என்ற இயக்கத்தையும் நடத்திவருகிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராகப் பணியாற்றிய நிலையில், இன்னும் ஒரிரு ஆண்டு அரசுப் பணி காலம் இருந்தும், தான் விருப்ப ஓய்வில் செல்வதாக அரசுக்கு அக்டோபர் 2-ஆம் தேதி கடிதம் அளித்திருந்தார். இந்நிலையில், இன்று (6-ந் தேதி புதன்கிழமை) அவர் அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

 

இந்நிலையில், அடுத்து பொதுவெளியில் சகாயத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை விசாரித்தபோது, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இணைந்து, வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்றும், மற்றொரு தகவலாக தேர்தல் பாதையற்ற தனி இயக்கம் தொடங்கப் போகிறார் எனவும் அவரது தரப்பு தெரிவிக்கிறது. தமிழக அரசியல் களத்தில் அதிகாரி சகாயத்தின் சாட்டையும் இனி வலம்வரப் போகிறது என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்