"திருமணமாகி இரண்டு வருஷமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியே எம்பொண்ண படுபாவிக கொண்ணுட்டானுங்களே" எனப் பதறி துடித்துக்கொண்டு பட்டதாரி இளம்பெண்ணின் பெற்றோரும் உறவினர்களும் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். "இந்தக் கொடுமையிலும் ஆளுங்கட்சியினர் தலையிடுறாங்களே நல்லா இருப்பாங்களா" என அடித்துப் புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே சேரன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன், மணிமேகலை தம்பதியினர். இவர்களின் மகள் சரண்யா, வயது 23. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவன் மனைவி இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வாடகை வீட்டிற்குக் குடிவந்துள்ளனர்.
இந்தச் சூழலில் சரண்யாவின் மாமியார் ஜக்கம்மா என்பவர் வரதட்சணை கேட்டு தொடர்ந்து சரண்யாவை துன்புறுத்தி வந்துள்ளார். சரண்யாவின் பெற்றோர்கள் திருமணத்திற்கு 40 பவுன் நகை, லட்சக்கணக்கில் சீர் சாமான்கள் வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று மதியம் சரண்யாவின் பெற்றோர்கள் மகளை பார்த்துவிட்டு பிரியாணி வாங்கிக் கொடுத்துவிட்டு, தஞ்சாவூர் சென்றுள்ளனர். சரண்யா வீட்டில் தனியாக இருந்தபோது கணவர் சரண்யாவை அடித்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இரவு தஞ்சையிலிருந்து வந்த பெற்றோர்கள், மகள் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சரண்யா தூக்கில் தொங்கி நின்றதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அழுது புரண்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு சரண்யா கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்தக் கடிதத்தில், “என் மாமியாரை யாரும் சும்மா விட்டுடாதிங்க” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்தக் கடிதத்தில் “என் புருஷன யாருமே எதும் பண்ணக் கூடாது. அவர் ரொம்ப நல்லவர். நாங்க இந்த உலகத்துல ஏங்கப் போனாலும் அவங்க அம்மா எங்கள சந்தோஷமா வாழவிடமாட்டாங்க” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் சரண்யாவின் தந்தை மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "ஏற்கனவே 40 பவுன் நகை, கார் வாங்க 5 லட்சம் திருமணத்திற்கான செலவு 10 லட்சம் செலவு செய்துள்ளோம். திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளை தமிழ்வேந்தன், அம்மா ஜக்கம்மா, சகோதரி தமிழ்ச்செல்வி ஆகியோர் சேர்ந்து சரண்யாவிடம் 50 பவுன் கூடுதலாகக் கொடுத்தால்தான், நீ நிம்மதியாக இங்கு வாழலாம் எனத் தொடர்ந்து துன்புறுத்திவந்தனர்" எனப் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருப்பதால்தான் மன்னார்குடி காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துகிறார் எனக் கூறி உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுப்பட்டுவருகின்றனர். சம்பவம் குறித்து கோட்டாட்சியர் அழகர்சாமி விசாரணை செய்து வருகிறார்.