பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று (03/08/2021) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள 2,129 சிறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள, 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் கொசு ஒழிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும் 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகைப்பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களைக் கட்டுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரின் ஆலோசனையின்படி நீர்வழித்தடங்களில் பணியாளர்களின் பாதுகாப்பு கருதி மனித ஆற்றல் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் வகையில் தற்பொழுது பெருநகர சென்னை மாநகராட்சியில் சோதனை அடிப்படையில் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கப்படுகிறது.
தற்போது மழை பெய்துவருவதால், மழைநீர் தேங்கக்கூடிய இடங்களில் கொசுப்புழுக்கள் வளர வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதன பெட்டியின் கீழ்த்தட்டு, மணி பிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரித்து மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சைப் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது." இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.