Skip to main content

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

 

New law to ban online rummy!

 

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி இன்று (04/08/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "‘ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடை செய்ய வேண்டும்’ என திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ‘ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்குத் தடை விதித்து’ அவசர கதியில் சட்டம் ஒன்றை அதிமுக அரசு நிறைவேற்றியது. 

 

அதிமுக அரசின் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துவைத்தபோதிலும், ‘இந்த விளையாட்டுகள் ஏன் தடை செய்யப்படுகிறது என்பது குறித்து போதுமான காரணங்களை சட்டத்தை நிறைவேற்றும்போது கூறவில்லை. விளையாட்டை முறைப்படுத்தும் உரிய விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது’ என்று கூறி, தமிழ்நாடு அரசின் ஆன்லைன் ரம்மி விளையாட்டினைத் தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனாலும், உரிய விதிமுறைகளை உருவாக்கி புதிய சட்டம் கொண்டு வருவதற்குத் தடை ஏதுமில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இதே தீர்ப்பில் தெளிவுப்படுத்தியிருக்கிறது. 

 

பொதுநலன் மிக முக்கியம் என்பதால், உரிய விதிமுறைகள் மற்றும் தகுந்த காரணங்களைத் தெளிவாகக் குறிப்பிட்டு, எவ்வித தாமதமுமின்றி, ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என முதலமைச்சர் நேற்றைய தினம் தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டிருக்கிறார். 

 

ஆகவே, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளைத் தடை செய்யும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்