பேச்சாளர் நெல்லைக் கண்ணனுக்கு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை, தி.நகர், சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “என் அப்பா செந்தமிழன் ஓராண்டுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதற்குப் போய்விட்டுத் திரும்பிக் கொண்டு இருந்தேன். நெல்லைக் கண்ணனின் பெயர் நெல்லை அப்பா என்று தான் என் அலைப்பேசியில் இருக்கும். வீடு திரும்பும் பொழுது அலைப்பேசியில் நெல்லைக் கண்ணன் அழைத்தார்.
அப்பா என்று சொன்னேன். தைரியமா இருக்கனும். நீ போராட்டக்காரன். கலங்கக் கூடாது. திருநெல்வேலியில் உனக்கு ஒரு அப்பா இருக்கிறேன். மறந்துவிடாதே எனச் சொன்னார். நான் பாரதிராஜா, மணிவண்ணன் மற்றும் நெல்லைக் கண்ணன் ஆகியோரை அப்பா என அழைப்பதால் சிலர் கேலி செய்கின்றனர்.
அவர்களுக்கு நான் சொல்லுவது ஒன்று தான். கிருபானந்த வாரியார் ஒருமுறை சொன்னார், “தாய் தான் பெற்ற குழந்தைக்குப் பாலூட்டுவது அன்பு. அதைப் போல எதிர்வீட்டுக் குழந்தைக்குப் பசித்ததும் பாலூட்டினால் அது அருள். அவர் என் மீது வைத்திருந்தது அன்பைத் தவிர வேறேதும் இல்லை. என் மீது அருள் பாலிக்கிற எல்லோரும் எனக்கு அப்பாக்கள் தான். தன் மகன் மேல் நெல்லைக் கண்ணன் எந்த அளவிற்கு அன்பு காட்டினாரோ அதே அன்பை என் மீதும் காட்டினார்.
முல்லை நிலக் கண்ணன் என் இறைவன். நெல்லை நிலக் கண்ணன் எங்கள் தகப்பன். அவரை நான் அழைத்தால் சுருக்கமாக செய்தியை சொல்லிவிட்டு வைத்துவிடுவேன். அனைவரும் அவர் கோபப்படுவார் எனச் சொல்லுவார்கள். என்மீது அவர் ஒரு நாளும் கோபப்பட்டது இல்லை.
ஒரு முறை கொஞ்சம் நா தழுதழுத்து, ‘அய்யா, திருமணம் செய்து கொள்ள வேண்டும். உனக்குப் பின்னால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் போராட ஒருத்தர் வேண்டாமா?. வேகமாக திருமணம் செய்துகொள்’ என்று சொன்னார். அதன் பின் நான் திருமணம் செய்துகொண்டேன்” எனக் கூறினார்.